/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தீபிகா குமாரி வச்ச குறி தப்பாது: ஒலிம்பிக் பதக்கமே இலக்குதீபிகா குமாரி வச்ச குறி தப்பாது: ஒலிம்பிக் பதக்கமே இலக்கு
தீபிகா குமாரி வச்ச குறி தப்பாது: ஒலிம்பிக் பதக்கமே இலக்கு
தீபிகா குமாரி வச்ச குறி தப்பாது: ஒலிம்பிக் பதக்கமே இலக்கு
தீபிகா குமாரி வச்ச குறி தப்பாது: ஒலிம்பிக் பதக்கமே இலக்கு
ADDED : ஜூலை 20, 2024 11:30 PM

பாரிஸ்: ''19 மாத மகளை பிரிந்து பாரிஸ் புறப்பட்ட போது ஏற்பட்ட மனவலியை விவரிப்பது கடினம். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு,'' என தீபிகா குமாரி தெரிவித்தார்.
இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, 30. கடந்த 2020ல் சக வீரர் அடானு தாசை திருமணம் செய்தார். 2022, டிசம்பரில் இவருக்கு மகள் பிறந்தது. பின் உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர், விரைவாக மீண்டார். நான்காவது முறையாக (2012, 16, 21, 24) ஒலிம்பிக்கில் களமிறங்க உள்ளார். இந்த முறை தாயாக பங்கேற்பது கூடுதல் சிறப்பு. பாரிஸ் மண் இவருக்கு ராசியானது. இங்கு 2021ல் நடந்த உலக கோப்பை வில்வித்தையில் தனிநபர், அணி, கலப்பு பிரிவில் அசத்தி 'ஹாட்ரிக்' தங்கம் வென்றார்.
இது குறித்து தீபிகா குமாரி கூறுகையில்,''மகள் வேதிகா பிறந்த உடன் எனக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது. அன்றாட பணிகளை கூட செய்ய முடியவில்லை. 19 கிலோ எடை கொண்ட நவீன வில் எடுத்து பயிற்சி செய்வது இயலாத காரியமாக இருந்தது. வில்வித்தை வாழ்க்கை முடிந்து விட்டது போல உணர்ந்தேன். 10 மாத குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு தென் கொரியா பறந்தேன். அங்கு பயிற்சியாளர் கிம் ஹியுங், 21 நாள் அளித்த பயிற்சி மீண்டு வர உதவியது. கோவாவில் கடந்த ஆண்டு நடந்த தேசிய விளையாட்டில் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி வென்றேன்.
பாரிஸ் புறப்படும் போது, 19 மாத மகள் வேதிகாவை பிரிந்து சென்ற தருணம் உணர்ச்சிகரமானது. அப்போது மனதில் ஏற்பட்ட வலியை விவரிப்பது கடினம். எனது குழந்தையை 'மிஸ்' செய்வேன். ஆனாலும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டிய கடமை உள்ளது. கலப்பு பிரிவில் இளம் வீரரான தீரஜ் உடன் சாதிக்க காத்திருக்கிறேன்,''என்றார்.
காலி பை ரகசியம்
பாரிஸ் செல்லும் போது தீபிகாவுக்கு அவரது கணவர் அடானு தாஸ், காலி பை ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார். இது குறித்து அடானு கூறுகையில்,''ஒலிம்பிக்கில் வெல்லும் பதக்கத்தை, பையில் வைத்து இந்தியா கொண்டு வரும்படி அன்பு கட்டளையிட்டுள்ளேன்,''என்றார்.
பயிற்சியாளர் நீக்கத்தால் சர்ச்சை
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி (ஜூலை 26-ஆக.11) நடக்க உள்ளது. 117 வீரர், வீராங்கனைகள், 140 பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் சேர்த்து 257 பேர் கொண்ட இந்தியக் குழு செல்கிறது. தீபிகா குமாரி உட்பட 6 வில்வித்தை நட்சத்திரங்களுடன் இரண்டு இந்திய பயிற்சியாளருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இன்னொரு பயிற்சியாளராக பாரிஸ் சென்ற தென் கொரியாவின் பெய்க் வூங் கி பெயர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டது.
இது குறித்து இவர் கூறுகையில்,''இந்திய ஒலிம்பிக் வில்வித்தை அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து இக்கட்டான நிலையில் நீக்கியுள்ளனர். நாடு திரும்பும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்காக தான் பணியில் அமர்த்தப்பட்டேன். இரண்டு ஆண்டு இந்திய நட்சத்திரங்களுக்கு பயிற்சி அளித்தேன். தற்போது இந்திய ஒலிம்பிக் சங்கம் அவசர கதியில் முடிவு எடுத்துள்ளது. அவமதிப்பு செய்துள்ளனர். எனது ஒப்பந்த காலம் ஆக. 30 வரை உள்ளது. எனக்கு இந்திய அணி பயிற்சியாளராக தொடர விருப்பமில்லை. விரைவில் தென் கொரியா திரும்புவேன்,''என்றார்.