ADDED : ஜூலை 18, 2024 10:40 PM

பையல்: சுவிட்சர்லாந்து செஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் வைஷாலி வெற்றி பெற்றார்.
சுவிட்சர்லாந்தில் சர்வதேச 'பையல் பெஸ்டிவல்' செஸ் தொடர் நடக்கிறது. இதன் கிராண்ட்மாஸ்டர் சாலஞ்சர் பிரிவில் இந்தியா சார்பில் வைஷாலி பங்கேற்கிறார். தற்போது கிளாசிக் முறையிலான போட்டி நடக்கிறது. முதல் சுற்றில் டென்மார்க்கின் ஜோனாசை வீழ்த்தினார் வைஷாலி. இரண்டாவது சுற்றில் வைஷாலி, ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் டன்சென்கோவுடன் மோதினார்.
இதில் வைஷாலி வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். துவக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்ட வைஷாலி, 27 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இரண்டு சுற்று முடிவில் வைஷாலி 8 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார்.
'கிராண்ட்மாஸ்டர் டிரையாத்லான்' பிரிவில் கிளாசிக் போட்டி நடக்கிறது. இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா, சீனாவின் லீ லியமை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, போட்டியின் 34வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். இரண்டு சுற்று முடிவில் பிரக்ஞானந்தா (1.5 புள்ளி) நான்காவது இடத்தில் உள்ளார்.