ADDED : ஜூலை 15, 2024 11:06 PM

பர்ன்: பெண்கள் 400 மீ., தடை ஓட்டத்தில் சாதனை படைத்தார் பெம்கே போல்.
சுவிட்சர்லாந்தில் ரெசிஸ்பிரின்ட் லா சாக்ஸ்-டி பான்ட்ஸ் தடகளம் நடந்தது. இதில் 400 மீ., தடை ஓட்டத்தில் அசத்திய நெதர்லாந்தின் பெம்கே போல் (50.95 வினாடி) புதிய ஐரோப்பிய சாதனை படைத்தார். தனது முந்தைய சாதனையை (51.45) தகர்த்தார்.
400 மீ., தடை ஓட்ட துாரத்தை 51 வினாடிகளுக்குள் எட்டிய உலகின் இரண்டாவது வீராங்கனையானார் பெம்கே. இதற்கு முன் அமெரிக்காவின் மெக்லாலின்-லெவ்ரோனே இரு முறை இலக்கை விரைவாக எட்டினார்.
2022ல் 50.68 வினாடிகளில் (யூஜின் தடகளம், 2022) கடந்து சாதித்தார். 2024ல் 50.65 வினாடியில் (யூஜின் தடகளம், 2024) எட்டி உலக சாதனை படைத்தார்.
கடந்த டோக்கியோ ஒலிம்பிக் (2021), 400 மீ., தடை ஓட்டத்தில் மெக்லாலின் (51.46) தங்கம் வென்றார். பெம்கே (52.03), வெண்கலம் கைப்பற்றினார். 2023ல் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் மெக்லாலின் (முழங்கால் காயம்) பங்கேற்காததால், பெம்கே எளிதாக தங்கம் வென்றார். வரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் இருவரும் சாதனையுடன் தங்கம் வெல்ல கடுமையாக முயற்சிப்பர்.
பெம்கே கூறுகையில், ''சுவிட்சர்லாந்து தடகளத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அதிவிரைவாக ஓடினேன். பாரிஸ் ஒலிம்பிக்கில் (ஜூலை 26-ஆக.11) மெக்லாலின் சவால் கொடுக்கலாம். சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்,'' என்றார்.