/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/அன்பு தங்கச்சி கண்ணு குளம் ஆச்சுஅன்பு தங்கச்சி கண்ணு குளம் ஆச்சு
ADDED : ஜூலை 29, 2024 11:28 PM

ஒலிம்பிக்கில் ஒருபக்கம் 'சிங்கிள்' தங்கம் கூட வெல்ல முடியாமல் பல நாடுகள் தவியாய் தவிக்கின்றன. மறுபக்கம் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தங்கை இரண்டு தங்கம் வென்று அசத்தினர். இம்முறை இரட்டை தங்கம் நழுவியதால், சோகத்தில் ஆழ்ந்தனர்.
ஜப்பானை சேர்ந்த ஜூடோ வீரர் ஹிபுமி அபே, 26. இவரது தங்கை உடா அபே, 24. இருவரும் ஜப்பானில் பிறந்த ஜூடோ தற்காப்பு கலையில் வல்லவர்கள். 2019ல் இருந்து வீழ்த்த முடியாத சகோதர, சகோதரியாக வலம் வருகின்றனர். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) இருவரும் ஒரே நாளில் தங்கம் வென்றனர். உலக சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் கைப்பற்றினர். ஒரே குடும்பத்தினர் இரு தங்கம் வெல்ல, ஜப்பானில் பிரபமலடைந்தனர். இவர்களது சிரித்த முக 'போட்டோ' லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தது.
மீண்டும் தங்கம் வெல்லும் இலக்குடன் பாரிஸ் ஒலிம்பிக் ஜூடோவில் களமிறங்கினர். நான்கு முறை உலக சாம்பியனான உடா அபே, கடந்த 5 ஆண்டுகளாக தோல்வியே சந்திக்கவில்லை. இந்த உற்சாகத்தில் இரண்டாவது சுற்றில் (52 கிலோ பிரிவு) களம் புகுந்தார். இவருக்கு உஸ்பெகிஸ்தான் வீராங்கனை டியோரா கெல்டியோரோ 'ஷாக்' கொடுத்தார். எதிர்பாராத தோல்வியை சந்தித்த உடா அபே, வெளியேறினார். இந்த சோகத்தில் நீண்ட நேரம் அழுதார்.
சில மணி நேரத்திற்கு பின் நடந்த பைனலில் (66 கிலோ) அண்ணன் ஹிபுமி அபே, பிரேசிலின் வில்லியம் லிமாவை வீழ்த்தி, மீண்டும் தங்கம் வென்றார்.
ஹிபுமி அபே கூறுகையில்,''என் தங்கையின் தோல்வியை பார்ப்பதற்கு கடினமாக இருந்தது. மனசெல்லாம் ரொம்ப வலித்தது. உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, அவருக்கு ஆறுதல் அளித்தேன். இந்த முறை இரண்டு தங்கம் கைகூடவில்லை. எங்கள் பயணம் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிலும் (2028) தொடரும். அங்கு இருவரும் தங்கம் வெல்ல முயற்சிப்போம்,''என்றார்.