ADDED : ஜூன் 15, 2024 11:57 PM

பெர்லின்: 'யூரோ' கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஸ்பெயின் அணி 3-0 என குரோஷியாவை வீழ்த்தியது.
ஜெர்மனியின் பெர்லினில் நேற்று நடந்த 'யூரோ' கோப்பை கால்பந்து 'பி' பிரிவு லீக் போட்டியில் உலகின் 'நம்பர்-8' ஸ்பெயின் அணி, 10வது இடத்தில் உள்ள குரோஷியாவை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ஸ்பெயினின் அல்வாரோ மொராடா ஒரு கோல் அடித்தார்.
அடுத்த நிமிடத்தில் குரோஷியாவின் மேடியோ கோவாசிக் கோல் அடிக்க முயற்சித்த பந்தை ஸ்பெயின் கோல்கீப்பர் உனாய் சைமன் சாமர்த்தியமாக தடுத்தார்.
தொடர்ந்து அசத்திய ஸ்பெயின் அணிக்கு பேபியன் ரூயிஸ், 32வது நிமிடத்தில் கோல் அடித்து கைகொடுத்தார். 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (43+3வது நிமிடம்) ஸ்பெயினின் டேனியல் கார்வஜல் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் ஸ்பெயின் அணி 3-0 என முன்னிலை வகித்திருந்தது.
இரண்டாவது பாதியின் 80வது நிமிடத்தில் குரோஷியாவுக்கு கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் புரூனோ பெட்கோவிச் ஒரு கோல் அடித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயின் வீரர்கள் 'அப்பீல்' செய்தனர். பின், 'வார்' தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்து இந்த கோல் திரும்ப பெறப்பட்டது. ஆட்டநேர முடிவில் ஸ்பெயின் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.