Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/அல்பேனியாவை வீழ்த்தியது இத்தாலி: யூரோ கோப்பை கால்பந்தில் கலக்கல்

அல்பேனியாவை வீழ்த்தியது இத்தாலி: யூரோ கோப்பை கால்பந்தில் கலக்கல்

அல்பேனியாவை வீழ்த்தியது இத்தாலி: யூரோ கோப்பை கால்பந்தில் கலக்கல்

அல்பேனியாவை வீழ்த்தியது இத்தாலி: யூரோ கோப்பை கால்பந்தில் கலக்கல்

UPDATED : ஜூன் 17, 2024 12:03 AMADDED : ஜூன் 17, 2024 12:01 AM


Google News
Latest Tamil News
டார்ட்மண்ட்: 'யூரோ' கோப்பை லீக் போட்டியில் இத்தாலி அணி, அல்பேனியாவை 2-1 என வீழ்த்தியது.

ஜெர்மனியில் 'யூரோ' கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. டார்ட்மண்ட்டில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் இத்தாலி, அல்பேனிய அணிகள் மோதின. பயிற்சியாளர் லுாசியானோ ஸ்பாலட்டி வழிநடத்த, இளம் இத்தாலி அணி களமிறங்கியது.

பலே பஜ்ராமி

ஆட்டம் துவங்கிய 23வது வினாடியில் அல்பேனியாவின் நெடிம் பஜ்ராமி மின்னல் வேகத்தில் கோல் அடித்து, இத்தாலிக்கு அதிர்ச்சி கொடுத்தார். இது, 64 ஆண்டு கால 'யூரோ கோப்பை வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிவேக கோல். இதற்கு முன் ரஷ்யாவின் டிமிட்ரி கிரிசென்கோ 67 வினாடிகளில் கோல் (எதிர், கிரீஸ், யூரோ 2004) அடித்திருந்தார்.

இத்தாலி முன்னிலை

துவக்கத்தில் ஏற்பட்ட சரிவில் இருந்து இத்தாலி விரைவாக மீண்டது. இந்த அணியின் அலெசாண்ட்ரோ பஸ்தோனி (11வது நிமிடம்) ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். தொடர்ந்து நிகோலோ பரேல்லா (16) ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் இத்தாலி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் இத்தாலி வசம் தான் பந்து பெரும்பாலும் இருந்தது. ஆனாலும் 'பினிஷிங்' இல்லாததால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. அல்பேனிய வீரர்களின் முயற்சிகளும் வீணாகின. இறுதியில் இத்தாலி அணி, 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

நெதர்லாந்து அபாரம்

ஹாம்பர்க்கில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் போலந்து, நெதர்லாந்து அணிகள் மோதின. போலந்தின் நட்சத்திர வீரர் லெவண்டோவ்ஸ்கி, தொடையின் தசை பகுதி காயம் காரணமாக களமிறங்கவில்லை. இவருக்கு பதில் வாய்ப்பு பெற்ற 6.3 அடி உயரம் கொண்ட ஆடம் புக்ஸா மிரட்டினார். 16வது நிமிடத்தில் தலையால் முட்டி முதல் கோல் அடித்தார். இதற்கு நெதர்லாந்தின் காக்போ (29) பதிலடி கொடுத்தார். முதல் பாதி 1-1 என சமனில் முடிந்தது. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கடுமையாக போராடின. பதட்டமான கடைசி கட்டத்தில் நெதர்லாந்தின் நம்பிக்கை நாயகன் வெகோர்ஸ்ட் (83) ஒரு கோல் அடித்து அசத்தினார். இறுதியில் நெதர்லாந்து 2-1 என்ற கணக்கில் வென்றது.



போலீசார் துப்பாக்கி சூடு

ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் 50 ஆயிரம் நெதர்லாந்து ரசிகர்கள் முகாமிட்டிருந்தனர். இங்கு திடீரென ஒருவர் கையில் கோடரி, பெட்ரோல் குண்டுடன், போலீஸ் அதிகாரியை மிரட்டினார். இவரை பிடிக்க முயற்சித்த போது தப்பி ஓடினார். உடனே போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் காயமடைந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us