ADDED : செப் 21, 2025 10:33 PM

போர்ட் லாடர்டேல்: மெஸ்ஸி 2 கோல் அடித்து கைகொடுக்க இன்டர் மயாமி அணி 3-2 என, டி.சி. யுனைடெட் அணியை வீழ்த்தியது.
அமெரிக்கா, கனடாவில், மேஜர்ஸ் லீக் கால்பந்து (எம்.எல்.எஸ்.,) தொடர் நடக்கிறது. மொத்தம் 30 அணிகள் பங்கேற்கின்றன. இதன் லீக் போட்டியில் இன்டர் மயாமி, டி.சி. யுனைடெட் அணிகள் மோதின. இதில் இன்டர் மயாமி அணி 3-2 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. மயாமி அணிக்கு மெஸ்ஸி 2 (66, 85வது), டாடியோ ஒரு கோல் (36வது நிமிடம்) அடித்தனர். டி.சி. யுனைடெட் சார்பில் கிறிஸ்டியன் பென்டேக் (53வது நிமிடம்), ஜேக்கப் முல்ரெல் (90+7வது) தலா ஒரு கோல் அடித்தனர்.
மெஸ்ஸி முதலிடம்: இத்தொடரில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் மெஸ்ஸி. இதுவரை 22 கோல் அடித்துள்ளார். அடுத்த இடத்தில் நாஷ்வில்லே அணியின் பிரிட்டன் வீரர் சாம் சுரிட்ஜ் (21 கோல்) உள்ளார். தவிர, சக வீரர்கள் கோல் அடிக்க அதிக முறை உதவிய ('அசிஸ்ட்') வீரர்கள் வரிசையில் 5வது இடத்தை பகிர்ந்து கொண்டார் மெஸ்ஸி. இதுவரை 12 முறை 'அசிஸ்ட்' செய்துள்ளார்.
இன்டர் மயாமி அணி, இதுவரை விளையாடிய 28 போட்டியில், 15 வெற்றி, 7 'டிரா', 6 தோல்வி என 52 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் பிலடெல்பியா அணி (60 புள்ளி) உள்ளது.