ADDED : ஜூன் 19, 2024 11:59 PM

ஸ்டட்கர்ட்: 'யூரோ' கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஜெர்மனி அணி 2-0 என ஹங்கேரியை வீழ்த்தியது.
ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நேற்று நடந்த 'யூரோ' கோப்பை கால்பந்து 'ஏ' பிரிவு லீக் போட்டியில் உலகின் 'நம்பர்-16' ஜெர்மனி அணி, 26வது இடத்தில் உள்ள ஹங்கேரி அணியை சந்தித்தது. ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் ஜெர்மனியின் ஹவர்ட்ஸ் கோல் அடிக்க முயற்சித்த பந்தை ஹங்கேரி கோல்கீப்பர் பீட்டர் குலாசி தடுத்தார். பின் 22வது நிமிடத்தில் ஜெர்மனியின் ஜமால் முசியாலா ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் ஹங்கேரியின் டொமினிக் சோபோஸ்லாயின் கோலடிக்கும் வாய்ப்பை ஜெர்மனி கோல்கீப்பர் மானுவல் நியூயர் சாமர்த்தியமாக தடுத்தார். முதல் பாதி முடிவில் ஜெர்மனி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாவது பாதியில் மீண்டும் அசத்திய ஜெர்மனி அணிக்கு 67வது நிமிடத்தில் இல்கே குண்டோகன் ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய ஹங்கேரி அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ஜெர்மனி அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் ஸ்காட்லாந்தை வீழ்த்திய ஜெர்மனி அணி, தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து, 'ரவுண்டு-16' சுற்றுக்கான இடத்தை உறுதி செய்தது.