ADDED : பிப் 06, 2024 09:56 PM

தாகா: தெற்காசிய கால்பந்து (19 வயது) தொடரின் பைனலுக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது. நேற்று கடைசி லீக் போட்டியில் நேபாளத்தை 4-0 என வீழ்த்தியது.
தெற்காசிய கால்பந்து தொடரின் (19 வயதுக்குட்பட்ட பெண்கள்), ஐந்தாவது சீசன் வங்கதேசத்தில் நடக்கிறது. இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான் என நான்கு அணிகள் மோதுகின்றன. 'டாப்-2' இடம் பெறும் அணிகள் பைனலுக்கு முன்னேறும். இந்திய அணி தனது முதல் போட்டியில் 10-0 என பூடானை வென்றதது.
இரண்டாவது போட்டியில் 0-1 என வங்கதேசத்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. நேற்று தனது கடைசி போட்டியில் நேபாளத்தை எதிர்கொண்டது. கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கியது இந்தியா. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் இந்தியாவின் நேஹா, 54 வது நிமிடம் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய இவர் 81 வது நிமிடம் இரண்டாவது கோல் அடித்தார்.
போட்டியின் 86 வது நிமிடத்தில் சுலஞ்சனா தன் பங்கிற்கு கோல் அடித்து அசத்தினார். போட்டியின் கடைசி 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+3 வது), சிந்தி ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 3 போட்டியில் 2 வெற்றி, 1 தோல்வியுடன் மொத்தம் 6 புள்ளி பெற்று இரண்டாவது இடம் பெற, இந்தியா பைனலுக்கு முன்னேறியது. நாளை இதில் மீண்டும் வங்கதேசத்தை எதிர்கொள்ள உள்ளது.