Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/முகத்தில் காயம்...பர்னபாஸ் பரிதாபம்: 'யூரோ' கால்பந்தில் இன்னொரு சோகம்

முகத்தில் காயம்...பர்னபாஸ் பரிதாபம்: 'யூரோ' கால்பந்தில் இன்னொரு சோகம்

முகத்தில் காயம்...பர்னபாஸ் பரிதாபம்: 'யூரோ' கால்பந்தில் இன்னொரு சோகம்

முகத்தில் காயம்...பர்னபாஸ் பரிதாபம்: 'யூரோ' கால்பந்தில் இன்னொரு சோகம்

ADDED : ஜூன் 24, 2024 11:03 PM


Google News
Latest Tamil News
ஸ்டட்கர்ட்: 'யூரோ' கோப்பை போட்டியில் ஹங்கேரி நட்சத்திர வீரர் பர்னபாஸ் வர்காவின் முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜெர்மனியில் 'யூரோ' கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. ஸ்டட்கர்ட்டில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் ஹங்கேரி, ஸ்காட்லாந்து மோதின. முதல் பாதியில் கோல் அடிக்கப்படவில்லை.

கோல்கீப்பருடன் மோதல்

ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் 'பிரீ கிக்' வாய்ப்பில் ஹங்கேரி கேப்டன் டொமினிக் சொபோஸ்லாய் பந்தை உதைத்தார். இதில் கோல் அடிக்க, சக வீரர் பர்னபாஸ் வர்கா நல்ல உயரத்தில் தாவினார். உடனே ஸ்காட்லாந்து கோல்கீப்பர் ஆங்கஸ் கன், கையால் குத்தி பந்தை வெளியே தள்ளினார். அப்போது இருவரும் மோதிக் கொள்ள, பர்னபாஸ் கீழே விழுந்தார். இவர் சுயநினைவின்றி இருந்ததால், சக வீரர்கள் கவலை அடைந்தனர். மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்க, மெதுவாக மீண்டார். பின் 'ஸ்டிரெச்சர்' மூலம் மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனால் ஆட்டம் 10 நிமிடம் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து 'வார்' தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, 'பெனால்டி' வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் 'பெனால்டி ஏரியாவில்' ஹங்கேரியின் வில்லி ஆர்பன், ஸ்காட்லாந்தின் ஸ்டூவர்ட் ஆர்ம்ஸ்டிராங்கை முரட்டுத்தனமாக மடக்கினார். இதற்கு ஸ்காட்லாந்து தரப்பில் 'பெனால்டி' கேட்கப்பட்டது. நடுவர் பகுண்டா டெல்லோ நிராகரித்தார்.

கெவின் கலக்கல்

கடைசி கட்டத்தில் ஹங்கேரி வீரர்கள் போராடினர். போட்டியின் 86வது நிமிடத்தில் மாற்று வீரராக வந்த கெவின் சோபோத், 'ஸ்டாப்பேஜ் நேரத்தில்' (90+10) கோல் அடிக்க, ஹங்கேரி 1-0 என வெற்றி பெற்றது.

தொடரும் பதட்டம்

கடந்த 'யூரோ' கோப்பை தொடரில், பின்லாந்துக்கு எதிரான போட்டியில் டென்மார்க்கின் எரிக்சனுக்கு களத்தில் மாரடைப்பு ஏற்பட, சக வீரர்கள் கலக்கமடைந்தனர். இதே போன்று நேற்று பர்னபாஸ் சுயநினைவின்றி இருந்த போது, பதட்டமான சூழல் நிலவியது. தற்போதைய தொடரில் பிரான்ஸ் அணியின் எம்பாப்வே மூக்கில் காயமடைந்து வெளியேறினார்.



நலமாக இருக்கிறாரா...

காயமடைந்த பர்னபாஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முகத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு 'ஆப்பரேஷன்' செய்யப்பட உள்ளது. குணமடைய 4-6 வாரம் தேவைப்படும். யூரோ கோப்பை தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க மாட்டார்.

ஹங்கேரி பயிற்சியாளர் மார்கோ ரோசி கூறுகையில்,''பர்னபாசிற்கு மூளை அதிர்வு ஏற்பட்டது. சுயநினைவின்றி இருந்ததால், சக வீரர்கள் அச்சம் அடைந்தனர். டாக்டர்கள் சற்று தாமதமாக வந்தனர். அவர்கள் ஆபத்தை உணரவில்லை. தற்போது பர்னபாசின் முகத்தில் பல எலும்புகள் உடைந்துள்ளன. உடல்நிலை சீராக உள்ளது,''என்றார்.

அர்ப்பணிப்பு

ஹங்கேரி வீரர் ரோலாண்ட் கூறுகையில்,''பர்னபாஸ்-கோல்கீப்பர் மோதல் பயங்கரமான சம்பவம். கோல்கீப்பரின் கை, தோள் பகுதி பர்னபாஸ் முகத்தில் பலமாக தாக்கியது. பர்னபாசுக்காக வெல்ல வேண்டும் என நினைத்தோம். இறுதியில் வென்றோம். வெற்றியை அவருக்கு அர்ப்பணிக்கிறோம்,'' என்றார்.

ஜெர்மனி-சுவிட்சர்லாந்து 'டிரா'

பிராங்பர்ட்டில் நடந்த மற்றொரு 'ஏ' பிரிவு லீக் போட்டியில் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. 28வது நிமிடத்தில் டேன் நிடோயே கோல் அடிக்க, சுவிட்சர்லாந்து 1-0 என முன்னிலை பெற்றது. 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் நிக்கோலஸ் புல்கிரக் (90+2) ஒரு கோல் அடிக்க, ஜெர்மனி அணி தப்பியது. இறுதியில் போட்டி 1-1 என 'டிரா' ஆனது. 'ஏ' பிரிவில் முதல் இரு இடம் பெற்ற ஜெர்மனி (7 புள்ளி), சுவிட்சர்லாந்து (5 புள்ளி), 'ரவுண்ட்-16' சுற்றுக்கு முன்னேறின. அடுத்த இடம் பெற்ற ஹங்கேரி (3 புள்ளி) காத்திருக்க வேண்டும். சிறப்பாக விளையாடிய மூன்றாவது அணியாக தேர்வு செய்யப்பட்டால், ஹங்கேரிக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஸ்காட்லாந்து (1 புள்ளி) வெளியேறியது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us