/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/காலிறுதியில் போர்ச்சுகல் அணி * 'பெனால்டி ஷூட் அவுட்டில்' வென்றதுகாலிறுதியில் போர்ச்சுகல் அணி * 'பெனால்டி ஷூட் அவுட்டில்' வென்றது
காலிறுதியில் போர்ச்சுகல் அணி * 'பெனால்டி ஷூட் அவுட்டில்' வென்றது
காலிறுதியில் போர்ச்சுகல் அணி * 'பெனால்டி ஷூட் அவுட்டில்' வென்றது
காலிறுதியில் போர்ச்சுகல் அணி * 'பெனால்டி ஷூட் அவுட்டில்' வென்றது
UPDATED : ஜூலை 03, 2024 04:36 PM
ADDED : ஜூலை 02, 2024 11:32 PM

பிராங்க்பர்ட்: யூரோ கோப்பை 'ரவுண்டு-16' போட்டியில் போர்ச்சுகல் அணி 'பெனால்டி ஷூட் அவுட்டில்' 3-0 என்ற கோல் கணக்கில் சுலோவேனியாவை வீழ்த்தியது.
ஜெர்மனியில் யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. லீக் சுற்று முடிந்த நிலையில் தற்போது 'ரவுண்டு-16' போட்டிகள் நடக்கின்றன. நேற்று பிராங்க்பர்ட்டில் நடந்த போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி, சுலோவேனியாவை எதிர்கொண்டது. இரு அணிகளும் கோல் அடிக்காததால், போட்டி கூடுதல் நேரத்துக்கு சென்றது.
நழுவிய 'பெனால்டி'
போட்டியின் 105 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு கிடைத்தது. பந்தை, தனக்கு வலது புறமாக செல்லும்படி, கோல் போஸ்ட்டை நோக்கி அடித்தார் ரொனால்டோ. இதை சரியாக கணித்த சுலோவேனிய கோல் கீப்பர் ஜான் ஆப்லக், இடது புறமாக பாய்ந்து, பந்தை வெளியே தள்ளிவிட்டார்.
பொன்னான வாய்ப்பு நழுவிய சோகத்தில் ரொனால்டோ அழுதார். கூடுதல் நேரத்தின் முடிவிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
'திரில்' வெற்றி
இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய, போட்டி 'பெனால்டி ஷூட் அவுட்டுக்கு' சென்றது. இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன.
* முதல் வாய்ப்பில் ஜோசிப் அடித்த பந்தை போர்ச்சுகல் கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்தார். போர்ச்சுகல் தரப்பில் ரொனால்டோ கோல் அடிக்க, 1-0 முந்தியது.
* அடுத்து பால்கோவெச் (சுலோவேனியா) வாய்ப்பை வீணடிக்க, புருனோ பெர்னாண்டஸ் (போர்ச்சுகல், 2-0) கோல் அடித்தார்.
* மூன்றாவது வாய்ப்பை வெர்பிச் (சுலோவேனியா) தவற விட்டார். போர்ச்சுகலின் பெர்னார்டோ, துல்லியமாக கோல் அடித்தார். அடுத்த இரு வாய்ப்பில் சுலோவேனியா கோல் அடித்தாலும், வெற்றி பெற முடியாது என்பதால், போட்டி முடிவுக்கு வந்தது.
போர்ச்சுகல் அணி 3-0 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று, இத்தொடரில் 7வது முறையாக காலிறுதிக்குள் நுழைந்தது. இதில் பிரான்சை (ஜூலை 5) சந்திக்கிறது.
1
யூரோ கால்பந்து வரலாற்றில் 'பெனால்டி ஷூட் அவுட்டில்' மூன்று வாய்ப்புகளை தடுத்த முதல் கோல் கீப்பர் ஆனார் போர்ச்சுகலின் டீகோ கோஸ்டா. தவிர, 'பெனால்டி ஷூட் அவுட்டில்' ஒரு கோல் கூட எதிரணிக்கு தராத முதல் கோல் கீப்பர் என்ற பெருமையும் பெற்றார்.
முதன் முறை
கூடுதல் நேரத்தில் 'பெனால்டி' வாய்ப்பை, ரொனால்டோ நழுவவிட்டது, இதுதான் முதன் முறை.
நெதர்லாந்து அணி வெற்றி
யூரோ கோப்பை தொடரில் ருமேனியாவை வென்ற நெதர்லாந்து அணி, காலிறுதிக்கு முன்னேறியது.
ஜெர்மனியின் முனிக்கில் நேற்று நடந்த 'ரவுண்டு-16' போட்டியில் நெதர்லாந்து, ருமேனிய அணிகள் மோதின. போட்டி துவங்கிய 20 வது நிமிடத்தில் சைமன்ஸ் கொடுத்த பந்தை பெற்ற கோடி கேப்கோ, கோலாக மாற்ற, நெதர்லாந்து அணி முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் இதைச் சமன் செய்ய, ருமேனிய வீரர்கள் எடுத்த எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. மாறாக மீண்டும் அசத்தினர் நெதர்லாந்து அணியினர். போட்டியின் 83வது நிமிடத்தில் பந்தை லாவகமாக கொண்டு சென்ற கேப்கோ, ருமேனிய கோல் ஏரியாவுக்குள் இருந்த மாலெனுக்கு 'பாஸ்' செய்தார்.
பந்தை பெற்ற வேகத்தில், அப்படியே வலைக்குள் தள்ளி கோல் அடித்தார் மாலென். முடிவில் நெதர்லாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது. இதில் ஆஸ்திரியா அல்லது துருக்கியை ஜூலை 6ல் சந்திக்க உள்ளது.