ADDED : ஜூன் 17, 2024 11:45 PM

ஸ்டட்கர்ட்: 'நான் செத்துப் பொழச்சவன்டா...எமனை பார்த்து சிரிச்சவன்டா' என்ற பாடல் வரிகள் கிறிஸ்டியன் எரிக்சனுக்கு பொருந்தும். மாரடைப்பில் இருந்து மீண்ட இவர், கோல் அடித்து அசத்தியுள்ளார்.
டென்மார்க் அணியின் மத்திய கள வீரர் கிறிஸ்டியன் எரிக்சன், 32. கடந்த 'யூரோ' கோப்பை தொடரின் (2021) முதல் லீக் போட்டியில் பின்லாந்துக்கு எதிராக பங்கேற்றார். டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடந்த இப்போட்டியின் 42வது நிமிடத்தில் எரிக்சனுக்கு மாரடைப்பு ஏற்பட, சக வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
மைதானத்தில் உடனடியாக சி.பி.ஆர்., 'டிபிப்ரிலேட்டர்' அவசர சிகிச்சை அளிக்கப்பட, எரிக்சன் இதயம் மீண்டும் துடித்தது. மறுபிறவி எடுத்த இவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயம் சீராக இயங்க, 'இம்ப்ளான்ட்டபிள் கார்டியோவெர்ட்டர்- டிபிப்ரிலேட்டர் (ஐ.சி.டி.,) கருவி பொருத்தப்பட்டது. மனஉறுதியுடன் மீண்ட எரிக்சன், மீண்டும் கால்பந்து களத்தில் இறங்கினார்.
தற்போது ஜெர்மனியில் நடக்கும் 'யூரோ' கோப்பை தொடரில் அசத்துகிறார். நேற்று முன் தினம் டென்மார்க் அணி தனது முதல் லீக் போட்டியில் சுலோவேனியாவை எதிர்கொண்டது. 17வது நிமிடத்தில் எரிக்சன் கலக்கல் கோல் அடித்தார். 2021ல் களத்தில் சுருண்ட விழுந்த இவர், சரியாக 1,100 நாளுக்கு பின் அதே 'யூரோ' கோப்பை தொடரில் கோல் அடித்து அசத்தியிருக்கிறார்.
இப்போட்டி 'டிரா' ஆன போதும், எரிக்சன் ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. 2021ல் எரிக்சன் மீண்டு வர ஊக்கம் அளிக்கும் முதல் போட்டிக்கான ஆட்ட நாயகன் கவுரவம் அளிக்கப்பட்டது. இம்முறை சுலோவேனியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றுள்ளார்.
எரிக்சன் கூறுகையில்,'''ஐ.சி.டி., பொருத்தியவர்கள் சகஜமாக வாழலாம். கால்பந்து களத்தில் அசத்தலாம் என நிரூபித்துள்ளேன்,'' என்றார்.