Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/கோப்பை வென்றது ஸ்பெயின்: 'யூரோ' கால்பந்தில் கலக்கல்

கோப்பை வென்றது ஸ்பெயின்: 'யூரோ' கால்பந்தில் கலக்கல்

கோப்பை வென்றது ஸ்பெயின்: 'யூரோ' கால்பந்தில் கலக்கல்

கோப்பை வென்றது ஸ்பெயின்: 'யூரோ' கால்பந்தில் கலக்கல்

ADDED : ஜூலை 15, 2024 11:13 PM


Google News
Latest Tamil News
பெர்லின்: 'யூரோ' கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி மீண்டும் ஏமாற்றியது.

ஜெர்மனியில், ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் ('யூரோ' கோப்பை) 17வது சீசன் நடந்தது. பெர்லின் நகரில் நடந்த பைனலில், உலகின் 'நம்பர்-5' இங்கிலாந்து அணி, 8வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது.

துவக்கத்தில் இருந்தே இரு அணியினரும் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (45+1வது நிமிடம்) இங்கிலாந்துக்கு 'பிரீகிக்' வாய்ப்பு கிடைத்தது. இதில் டெக்லான் ரைஸ் துாக்கி அடித்த பந்தை, பில் போடன் கோல் போஸ்ட்டை நோக்கி அடித்தார். ஆனால் ஸ்பெயின் கோல் கீப்பர் சைமன் பந்தை கச்சிதமாக பிடிக்க, இங்கிலாந்தின் கோல் வாய்ப்பு நழுவியது. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் முடிந்தது.

இரண்டாவது பாதியின் 47வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் லாமின் யமால் 'பாஸ்' செய்த பந்தில் நிகோ வில்லியம்ஸ் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 73வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜெர்மைன் பால்மர் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். 86வது நிமிடத்தில் ஸ்பெயினின் மார்க் குகுரெல்லா 'பாஸ்' செய்த பந்தில் மைக்கேல் ஓயர்சபால் ஒரு கோல் அடித்தார். 90வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியினரின் கோல் அடிக்கும் முயற்சியை ஸ்பெயின் வீரர்கள் சாமர்த்தியமாக தடுத்தனர்.

முடிவில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 12 ஆண்டுகளுக்கு பின் 'யூரோ' கோப்பை வென்றது.

நான்காவது முறை

'யூரோ' கோப்பை கால்பந்தில் ஸ்பெயின் அணி 4வது முறையாக (1964, 2008, 2012, 2024) கோப்பை வென்றது. இத்தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியானது. அடுத்த இடத்தில் ஜெர்மனி (3 முறை, 1972, 1980, 1996) உள்ளது.



'கோல்டன் ஷூ' விருது

அதிக கோல் அடித்தவருக்கான 'கோல்டன் ஷூ' விருதை இங்கிலாந்தின் ஹாரி கேன், ஸ்பெயினின் டேனி ஆல்மோ, ஜெர்மனியின் ஜமால் முசியாலா, நெதர்லாந்தின் கோடி காக்போ, சுலோவாகியாவின் இவான் ஷ்ரான்ஸ், ஜார்ஜியாவின் ஜார்ஜஸ் மிகுடாட்சே என 6 பேர் பகிர்ந்து

கொண்டனர். இவர்கள் தலா 3 கோல் அடித்தனர்.

* தொடர் நாயகன் விருதை ஸ்பெயின் வீரர் ரோட்ரி வென்றார். சிறந்த இளம் வீரருக்கான விருதை ஸ்பெயினின் லாமின் யமால் 17, தட்டிச் சென்றார்.

117 கோல்

இத்தொடரில் பைனல், அரையிறுதி உட்பட 51 போட்டியில், 117 கோல் அடிக்கப்பட்டன. இதில் 10 'சேம்சைடு' கோல் அடங்கும்.

* ஸ்பெயின் சார்பில் 15 கோல் பதிவாகின. ஜெர்மனி 11, நெதர்லாந்து 10, சுவிட்சர்லாந்து, துருக்கி, இங்கிலாந்து தலா 8 கோல் அடித்தன.

நுாறு சதவீத வெற்றி

ஸ்பெயின் அணி 100 சதவீத வெற்றியுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. லீக் சுற்றில் 3, 'நாக்-அவுட்' சுற்றில் 4 என 7 போட்டியிலும் வென்றது. பைனல் வரை சென்ற இங்கிலாந்து, 3 வெற்றி, 3 'டிரா', ஒரு தோல்வியை பெற்றது.

சூப்பர் பயிற்சியாளர்

ஸ்பெயின் அணியின் தலைமை பயிற்சியாளராக லுாயிஸ் டி லா பியன்டே 63, உள்ளார். இவரது பயிற்சியின் கீழ், பெரிய தொடர்களில் ஸ்பெயின் அணிக்கு 4 கோப்பை (2015ல் 19 வயது 'யூரோ', 2019ல் 21 வயது 'யூரோ', 2023ல் நேஷன்ஸ் லீக், 2024ல் 'யூரோ') கிடைத்துள்ளன.

தொடரும் சோகம்

இங்கிலாந்து அணி 1966ல் உலக கோப்பை வென்றது. அதன்பின் மிகப் பெரிய தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றதில்லை. 'யூரோ' கோப்பை பைனலில் மீண்டும் ஏமாற்றிய இங்கிலாந்து அணியின் 58 ஆண்டு கால சோகம் தொடர்கிறது.

ஐந்து நாடுகள்

'யூரோ' கோப்பை 18வது சீசன் வரும் 2028ல் (ஜூன் 9 - ஜூலை 9) நடக்கவுள்ளது. இத்தொடரை இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் என ஐந்து நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் 3வது முறையாக (1996, 2020, 2028) 'யூரோ' போட்டிகள் நடக்கவுள்ளன. ஸ்காட்லாந்தில் 2வது முறையாகவும் (2020, 2028), வடக்கு அயர்லாந்து, அயர்லாந்து, வேல்சில் முதன்முறையாக நடக்கவுள்ளன.

ரூ. 257 கோடி பரிசு

ஸ்பெயின் அணிக்கு சாம்பியன் கோப்பையுடன், ரூ. 257 கோடி பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த இங்கிலாந்துக்கு ரூ. 221 கோடி பரிசாக கிடைத்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us