/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ரன் மழை பொழிந்த பூரன் * வெஸ்ட் இண்டீஸ் வெற்றிரன் மழை பொழிந்த பூரன் * வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
ரன் மழை பொழிந்த பூரன் * வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
ரன் மழை பொழிந்த பூரன் * வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
ரன் மழை பொழிந்த பூரன் * வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
ADDED : ஜூன் 18, 2024 11:07 PM

கிராஸ் ஐலெட்: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. நிகோலஸ் பூரன் 98 ரன் விளாசினார்.
வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் கடைசி லீக் போட்டியில், ஏற்கனவே 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறிய வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங் தேர்வு செய்தது.
சூப்பர் ஜோடி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் (7), சார்லஸ் ஜோடி துவக்கம் தந்தது. பின் சார்லஸ், நிகோலஸ் பூரன் சேர்ந்து வேகமாக ரன் சேர்த்தனர். அஸ்மதுல்லா ஓமர்சாய் வீசிய 4வது ஓவரில் ரன் மழை பொழிந்தார் பூரன். 3 சிக்சர், 2 பவுண்டரி உட்பட மொத்தம் 36 ரன் எடுக்கப்பட்டன. வெஸ்ட் இண்டீஸ் அணி 6 ஓவரில் 92/1 ரன் குவித்தது.
பூரன் விளாசல்
சார்லஸ் 43 ரன் எடுத்து, நவீன் உல் ஹக் பந்தில் அவுட்டானார். ஹோப் 25 ரன் எடுத்தார். இதன் பின் அணியின் ரன்வேகம் குறைந்தது. முதல் 13 பந்தில் 36 ரன் எடுத்த பூரன், அடுத்த 27 பந்தில் 19 ரன் மட்டும் எடுத்து அரைசதம் கடந்தார். ரஷித் கான் வீசிய 18 ஓவரில் 3 சிக்சர், 1 பவுண்டரி உட்பட 24 ரன் எடுத்தார் பூரன். கேப்டன் பாவெல் 26 ரன் எடுத்து திரும்பினார்.
பூரன் எதிர்கொண்ட கடைசி 13 பந்தில் 43 ரன் விளாசினார். இவர் (98 ரன், 8x6, 6x4)), சதம் அடிக்க அவசரப்பட்டு ரன் அவுட்டானார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 218/5 ரன் குவித்தது. 'டி-20' உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி எடுத்த அதிக ரன் இதுவானது (முன்னதாக 205/6, 2007, தென் ஆப்ரிக்கா).
ஜத்ரன் ஆறுதல்
ஆப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ் (0), இப்ராகிம் ஜத்ரன் (38) ஜோடி துவக்கம் கொடுத்தது. ஓமர்சாய் (23), கரிம் (14), கேப்டன் ரஷித் கான் (18) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. ஆப்கானிஸ்தான் 16.2 ஓவரில் 114 ரன்னுக்கு சுருண்டு தோற்றது. மெக்காய் 3 விக்கெட் சாய்த்தார்.
36
'டி-20' அரங்கில் ஒரே ஓவரில் அதிக ரன் எடுத்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஓமர்சாய் வீசிய 4வது ஓவரில் பூரன் 3 சிக்சர், 2 பவுண்டரி அடிக்க, 10 உதிரி உட்பட மொத்தம் 36 ரன் (6, 4+1 நோ பால், 5 வைடு, 0, 4 லெக் பை, 4, 6, 6) எடுக்கப்பட்டன.
* முன்னதாக 2007ல் இந்தியாவின் யுவராஜ் (பவுலர்-பிராட், இங்கிலாந்து), 2021ல் வெஸ்ட் இண்டீசின் போலார்டு (தனஞ்செயா, இலங்கை), 2024ல் இந்தியாவின் ரோகித்-ரிங்கு சிங் (ஜனத், ஆப்கன்), நேபாளத்தின் திபேந்திரா (கம்ரான், கத்தார்) ஒரே ஓவரில் 36 ரன் விளாசினர்.
92
'டி-20' உலக கோப்பை அரங்கில் 'பவர் பிளே' ஓவரில் (முதல் 6) அதிக ரன் எடுத்த அணியானது வெஸ்ட் இண்டீஸ் (92/1). 2014ல் அயர்லாந்து அணி 91/1 ரன் (எதிர்-நெதர்லாந்து) எடுத்திருந்தது.
128
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச 'டி-20'ல் அதிக சிக்சர் அடித்த வீரர்களில் கெய்லை (124) முந்தி முதலிடம் பிடித்தார் பூரன் (128).
152
'டி-20' அரங்கில் நேற்று, 'பவர் பிளே' (1-6ல் 92 ரன்), 'டெத்' ஓவரில் (17-20ல் 60) அதிக ரன் (152) குவித்து சாதனை படைத்தது வெஸ்ட் இண்டீஸ். இதற்கு முன் 2023 ஆசிய விளையாட்டில் நேபாளம் 151 ரன் (எதிர்-மங்கோலியா) எடுத்திருந்தது.