/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்ரிக்கா * வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்ரிக்கா * வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்
அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்ரிக்கா * வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்
அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்ரிக்கா * வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்
அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்ரிக்கா * வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்
ADDED : ஜூன் 24, 2024 10:53 PM

ஆன்டிகுவா: 'டி-20' உலக கோப்பையில் தொடர்ந்து ஏழாவது வெற்றியை பெற்ற தென் ஆப்ரிக்க அணி, அரையிறுதிக்குள் நுழைந்தது. சொந்தமண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி சோகத்துடன் வெளியேறியது.
வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 'சூப்பர்-8' சுற்று 'பிரிவு 2'ல் இருந்து இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. அமெரிக்கா வெளியேறியது.
ஆன்டிகுவாவில் நடந்த மோதலில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மோதின. இதில் வெல்லும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா 'பீல்டிங்' தேர்வு செய்தது.
அதிர்ச்சி துவக்கம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஜான்சென் பந்தில் ஹோப் 'டக்' வுட்டானார். ஆடுகளம் சுழலுக்கு கைகொடுக்க, தென் ஆப்ரிக்க தரப்பில் மார்க்ரம், மஹாராஜா, ஷம்சி என மாறி மாறி பந்தை சுழற்றினர். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. மார்க்ரம் வீசிய 2வது ஓவரில் பூரன் (1) சிக்கினார். மேயர்ஸ், ராஸ்டன் சேஸ் இணைந்து அணியை மீட்க போராடினர்.
திடீர் சரிவு
மூன்றாவது விக்கெட்டுக்கு 81 ரன் எடுத்த போது, மேயர்ஸ் (35) அவுட்டானார். பின் வந்த கேப்டன் பாவெல் (1), ரூதர்போர்டு (0) விரைவில் கிளம்பினர். சேஸ், 52 ரன் எடுத்தார். ஆன்ட்ரி ரசல் (12) ரன் அவுட்டாகி வெளியேறினார். ஒரு கட்டத்தில் 11.5 ஓவரில் 86/2 என இருந்த வெஸ்ட் இண்டீஸ், அடுத்த 32 ரன் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை (118/8) பறிகொடுத்தது.
20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 134/8 ரன் எடுத்தது.
தென் ஆப்ரிக்கா சார்பில் ஷம்சி 3 விக்கெட் சாய்த்தார்.
மாறிய இலக்கு
தென் ஆப்ரிக்க அணி துவக்கத்தில் ஹென்ரிக்ஸ் (0), குயின்டன் டி காக்கை (12) இழந்தது (12/2 ரன்). பின் மழையால் போட்டி தாமதம் ஆக, 17 ஓவரில் 123 ரன் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றப்பட்டது. மழை காரணமாக பந்து ஈரமாக, பவுலர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதைப்பயன்படுத்திய மார்க்ரம் (15), கிளாசன் (22) அசத்தினர். மில்லர் (4) கைவிட்ட போதும், ஸ்டப்ஸ் (29) உதவினார். கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டன.
மெக்காய் வீசிய முதல் பந்தில் ஜான்சென் சிக்சர் அடிக்க, தென் ஆப்ரிக்கா 16.1 ஓவரில் 124/7 ரன் எடுத்தது. 'டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 6 புள்ளியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. ஜான்சென் (21), ரபாடா (5) அவுட்டாகாமல் இருந்தனர்.
7
'டி-20' உலக கோப்பையில் தொடர்ந்து அதிக போட்டியில் வென்ற அணியானது தென் ஆப்ரிக்கா. இம்முறை லீக் சுற்றில் 4, 'சூப்பர்-8'ல் 3 என 7 போட்டியில் வென்றுள்ளது. தலா 6 போட்டியில் வென்ற இலங்கை (2009), ஆஸ்திரேலியா (2010, 2021) அடுத்த இடத்தில் உள்ளன.
* தவிர சர்வதேச 'டி-20'ல் தென் ஆப்ரிக்க அணி மூன்றாவது முறையாக, தொடர்ந்து 7 போட்டியில் (2009, 2021, 2024) வென்றது.
62
'டி-20' உலக கோப்பை அரங்கில் ஒரு தொடரில் அதிக சிக்சர் அடித்த அணி வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் முதலிடம் பிடித்தது. இம்முறை வெஸ்ட் இண்டீஸ் சார்பில் 62 சிக்சர் அடிக்கப்பட்டன. 2010 தொடரில் 57 சிக்சர் அடித்த ஆஸ்திரேலியா, இரண்டாவதாக உள்ளது. மூன்றாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் (2012ல் 49) உள்ளது.
10 ஆண்டுக்குப் பின்...
ஐ.சி.சி.,யின் ஒருநாள் (5 அரையிறுதி), 'டி-20' (2 அரையிறுதி) தொடரில் தென் ஆப்ரிக்க அணி இதுவரை கோப்பை வென்றது இல்லை. அதிகபட்சம் 7 முறை அரையிறுதிக்கு முன்னேறியது. கடைசியாக 2014 'டி-20' உலக தொடரின் அரையிறுதியில் இந்தியாவிடம் தோற்றது. தற்போது 10 ஆண்டுக்குப் பின் மீண்டும் அரையிறுதிக்கு முன்னேறியது.