UPDATED : ஜூன் 10, 2024 11:01 PM
ADDED : ஜூன் 10, 2024 10:54 PM

ஆன்டிகுவா: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் ஓமனை வென்றது.
வெஸ்ட் இண்டீசின் நார்த் சவுண்டு மைதானத்தில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் ஸ்காட்லாந்து, ஓமன் அணிகள் மோதின.
'டாஸ்' வென்ற ஓமன் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஏற்கனவே முதல் இரு போட்டியில் தோற்ற ஓமன், அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் களமிறங்கியது.
பிரதிக் அரைசதம்
ஓமன் அணிக்கு பிரதிக் அதவாலே, நஷீம் குஷி (10) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. கேப்டன் அகுய்ப் 16 ரன் எடுத்தார். ஜீஷான் (3), காலித் (5) ஒற்றை இலக்கில் திரும்ப, பிரதிக் அரைசதம் கடந்தார். இவர் 40 பந்தில் 54 ரன் எடுத்து திரும்பினார். மெஹ்ரான் (13) நிலைக்கவில்லை.
ஓமன் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 150 ரன் எடுத்தது. அயான் கான் (41), ஷகீல் (3) அவுட்டாகாமல் இருந்தார். ஸ்காட்லாந்தின் ஷரிப் 2 விக்கெட் சாய்த்தார்.
மெக்முல்லன் அபாரம்
ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்சே, மைக்கேல் ஜோன்ஸ் (16) ஜோடி துவக்கம் கொடுத்தது. முன்சே 20 பந்தில் 41 ரன் விளாச, அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. கேப்டன் பெர்ரிங்டன் (13) ஏமாற்றினார். பிரண்டன் மெக்முல்லன் அரைசதம் அடிக்க வெற்றி எளிதானது.
ஸ்காட்லாந்து அணி 13.1 ஓவரில் 153/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மெக்முல்லன் (61), கிராஸ் (15) அவுட்டாகாமல் இருந்தனர். தொடர்ந்து மூன்று போட்டியில் தோற்ற ஓமன் அணி, 'சூப்பர்-8' சுற்று வாய்ப்பை இழந்தது.