ADDED : மார் 24, 2025 10:46 PM

மும்பை: பும்ரா, ஹர்திக் பாண்ட்யா வழியில் திறமையான விக்னேஷை கண்டறிந்துள்ளது மும்பை அணி.
கேரளாவின் மலப்புரத்தை சேர்ந்தவர் விக்னேஷ் புதுார் 24. அப்பா ஆட்டோ ஓட்டுகிறார். தற்போது கோழிக்கோட்டில் உள்ள அரசு கல்லுாரியில் எம்.ஏ., ஆங்கில இலக்கியம் பயின்று வருகிறார். கேரளா, தமிழக கிரிக்கெட் லீக் தொடர்களில் மட்டும் விளையாடினார்.
இன்னும் முதல் தர போட்டிகளில் கூட விளையாடவில்லை. எனினும் பும்ரா, ஹர்திக் பாண்ட்யாவை கண்டறிந்தது போல, விக்னேஷ் திறமையை பார்த்து, 2024ல் பயிற்சி முகாமில் சேர்த்தது மும்பை நிர்வாகம். பின் நடந்த ஏலத்தில் ரூ. 30 லட்சத்துக்கு வாங்கியது.
தென் ஆப்ரிக்காவில் நடந்த 'டி-20' தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி வீரர்களுக்கு, வலைப்பயிற்சியில் பவுலிங் செய்ய அனுப்பப்பட்டார். அங்கு அனுபவ ரஷித் கான், மலிங்கா பட்டை தீட்டினர்.
தற்போது சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் 'இம்பேக்ட்' வீரராக, அறிமுக வாய்ப்பு பெற்றார் விக்னேஷ். ருதுராஜ், துபே, ஹூடா என மூவரை அவுட்டாக்கி, மிரட்டினார்.
அவர் கூறுகையில், ''எனது வாழ்க்கையில், முன்னணி வீரர்களுடன் இணைந்து இப்படி விளையாடுவேன் என ஒருபோதும் நினைத்துக் கூட பார்த்தது இல்லை,'' என்றார்.
தோனி பாராட்டு
போட்டி முடிந்ததும், விக்னேஷ் கைகளை பிடித்தார் சென்னை அணி கேப்டன் தோனி. அப்போது, தோனியை பார்த்த மகிழ்ச்சியில் எதுவும் பேசாமல் இருந்தார் விக்னேஷ், முதுகில் தட்டி பாராட்டினார் தோனி.