/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/தோனியை பார்க்க பார்க்க ஆனந்தம்: சேப்பாக்கம் ரசிகர்கள் உல்லாசம்தோனியை பார்க்க பார்க்க ஆனந்தம்: சேப்பாக்கம் ரசிகர்கள் உல்லாசம்
தோனியை பார்க்க பார்க்க ஆனந்தம்: சேப்பாக்கம் ரசிகர்கள் உல்லாசம்
தோனியை பார்க்க பார்க்க ஆனந்தம்: சேப்பாக்கம் ரசிகர்கள் உல்லாசம்
தோனியை பார்க்க பார்க்க ஆனந்தம்: சேப்பாக்கம் ரசிகர்கள் உல்லாசம்
ADDED : மார் 24, 2025 11:55 PM

சென்னை: ''சேப்பாக்கம் மைதானம் எப்போதும் 'ஸ்பெஷல்'. இங்கு ரசிகர்கள் எழுப்பும் 'விசில்' சத்தம் விண்ணைத் தொடும்,''என தோனி தெரிவித்தார்.
சேப்பாக்கத்தில் நேற்று முன் தினம் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சென்னை அணி, மும்பையை வீழ்த்தியது. தொடரை வெற்றியுடன் துவக்கிய மகிழ்ச்சியில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் தோனி கூறியது:
நன்றி உணர்வு: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், பிரிமியர் போட்டியில் மட்டும் பங்கேற்கிறேன். ஒவ்வொரு முறை களமிறங்கும் போது, நான் சிறப்பாக விளையாட வேண்டுமென ரசிகர்கள் விரும்புவது ஒரு அற்புதமான உணர்வு. இன்னும் சில காலம் விளையாடலாம். இத்தனை ஆண்டுகள், களத்தின் நான் நிகழ்த்திய சம்பவங்களுக்கு ரசிகர்கள் நன்றி தெரிவிப்பதாகவே கருதுகிறேன். தாங்கள் விரும்பும் வீரருக்கு ஆதரவு தெரிவிக்க, முழுமனதுடன் மைதானத்திற்கு வருகின்றனர். இதில் சென்னை, சேப்பாக்கம் மைதானம் எனக்கு ரொம்ப 'ஸ்பெஷல்'. இங்கு ரசிகர்கள் எழுப்பும் பெரிய 'விசில்' சத்தம் வியக்க வைக்கும். இதை தவிர்த்து எனக்கு பிடித்த மைதானம் என எதுவும் கிடையாது. இருப்பினும் மும்பை மீது சிறிய விருப்பம் உண்டு. இங்கு 2007ல் 'டி-20' உலக கோப்பை வென்று திரும்பிய போது உற்சாக வரவேற்பு அளித்தனர். 2011, உலக கோப்பை பைனல் வெற்றி என இனிமையான நினைவுகளை மும்பை தரும்.
மாறிய ஆட்டம்: பிரிமியர் தொடர் தற்போது மாறிவிட்டது. முன்பு ஆடுகளத்தில் பந்துகள் சுழலும். தற்போது பேட்டர்களுக்கு சாதகமாக ஆடுகளங்கள் அமைக்கப்படுகின்றன. பேட்டர்களும் 'ரிஸ்க்' எடுத்து விளையாடுகின்றனர். புதுமையான 'ஷாட்' அடிக்க முயற்சிக்கின்றனர். வேகப்பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்கூப், ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற 'ஷாட்' அடித்து மிரட்டுகின்றனர். இதற்கு ஏற்ப நானும் எனது பேட்டிங்கில் மாற்றம் செய்து வருகிறேன். காலத்திற்கு ஏற்ப மாறுவது அவசியம்.
கேப்டன் தேர்வு : ருதுராஜ் மிகவும் அமைதியானவர். இவரது அணுகுமுறை பயிற்சியாளர் பிளமிங்கிற்கு பிடித்திருந்தது. இதனால் தான் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை கடந்த ஆண்டு ஒப்படைத்தோம். நான் கொடுக்கும் 'அட்வைசை' பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என அறிவுறுத்தினேன். நான் தான் பின்னணியில் இருந்து முடிவு எடுப்பதாக பலரும் கணித்தனர். உண்மையில் 99 சதவீத முடிவுகளை ருதுராஜ் தான் எடுத்தார். பவுலர்கள் மாற்றம், பீல்டிங் வியூகம், போன்ற முக்கிய முடிவுகளை அவரே மேற்கெண்டார். நான் அவ்வப்போது உதவி செய்தேன். கோலியுடன் நட்பு தொடர்கிறது. தற்போது இருவரும் கேப்டனாக இல்லாததால், போட்டிக்கு முன் அதிக நேரம் பேசிக் கொள்கிறோம்.
இவ்வாறு தோனி கூறினார்.
இது சரியா ரச்சின்
மும்பைக்கு எதிரான போட்டியில், ஜடேஜா (18.4) ரன் அவுட்டாக, 'தல' தோனி கம்பீரமாக களமிறங்க, சேப்பாக்கம் அரங்கம் அதிர்ந்தது. அடுத்த இரு பந்துகளில் தோனி ரன் எடுக்கவில்லை. கடைசி ஓவரில் 4 ரன் தேவைப்பட்டன. சான்ட்னர் பந்துவீசினார். ரச்சின் ஒரு ரன் எடுத்து தோனிக்கு 'ஸ்டிரைக்' கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ரச்சின் 'சிக்சர்' அடித்து, வெற்றியை உறுதி செய்தார். தோனி ரன் எடுக்காமல் திரும்பினார். இதனால் ஆத்திரமடைந்த சில ரசிகர்கள் ரச்சின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்தனர்.
இது பற்றி ரச்சின் கூறுகையில்,''தோனிக்கு நான் 'ஸ்டிரைக்' கொடுத்து, அவரே 'பினிஷிங்' செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். என்னை பொறுத்தவரை வெற்றியை எட்டுவதே இலக்காக இருந்தது. சென்னை அணிக்காக பல போட்டிகளில் வெற்றிகரமாக தோனி 'பினிஷிங்' செய்துள்ளார். இன்னும் பல போட்டிகளில் சாதிக்க காத்திருக்கிறார்,''என்றார்.
மாறாத 'ஸ்டைல்'
தோனிக்கு 43 வயதானாலும், களத்தில் துடிப்பாக செயல்படுகிறார். 'ஸ்பின்னர்' நுார் பந்தில் சூர்யகுமாரை கண் இமைக்கும் நேரத்தில் (0.12 வினாடி) 'ஸ்டம்பிங்' செய்தார். எல்லிஸ் பந்தில் சான்ட்னருக்கு எல்.பி.டபிள்யு., கேட்டனர். கள அம்பயர் மறுத்தார். தோனி 'ரிவியு' கேட்க சொல்ல, கேப்டன் ருதுராஜும் 'டி' சைகை காண்பித்தார். 'ரீப்ளே'வில் பந்து 'மிடில் ஸ்டம்பை' தகர்ப்பது உறுதியானது. 'தோனி ரிவியு சிஸ்டம்' மீண்டும் வெல்ல, சான்ட்னர் வெளியேறினார்.
ஆட்ட நாயகன் நுார் கூறுகையில்,''தோனியின் 'ஸ்டம்பிங்' நம்ப முடியாத வகையில் சிறப்பாக இருந்தது. 'ஸ்டம்ப்சிற்கு' பின் இவர் நிற்பது எனக்கு பெரும் பலம்,''என்றார்.