ADDED : பிப் 25, 2024 11:20 PM

பெங்களூரு: பெண்களுக்கான பிரிமியர் லீக் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது.
இந்தியாவில் பெண்களுக்கான பிரிமியர் லீக் கிரிக்கெட் 2வது சீசன் நடக்கிறது. பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் குஜராத், 'நடப்பு சாம்பியன்' மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
குஜராத் அணிக்கு வேதா (0), ஹர்லீன் (8), லிட்ச்பீல்டு (7), ஹேமலதா (3) ஏமாற்றினர். கேப்டன் பெத் மூனே (24) ஆறுதல் தந்தார். அமெலியா கெர் 'சுழலில்' கார்ட்னர் (15), ஸ்னே ராணா (0) சிக்கினர். கேத்ரின் பிரைஸ் (25*), தனுஜா கன்வர் (28) ஜோடி ஆறுதல் தந்தது. குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 126 ரன் எடுத்தது. மும்பை அணி சார்பில் கெர் 4, ஷப்னிம் 3 விக்கெட் சாய்த்தனர்.
சுலப இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு யாஸ்திகா (7), ஹேலி மாத்யூஸ் (7) ஏமாற்றினர். நாட் சிவர்-புருன்ட் (22) நம்பிக்கை தந்தார். பின் இணைந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், அமெலியா கெர் ஜோடி கைகொடுத்தது. நான்காவது விக்கெட்டுக்கு 66 ரன் சேர்த்த போது கெர் (31) அவுட்டானார். ஸ்னே ராணா பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஹர்மன்பிரீத் வெற்றியை உறுதி செய்தார்.
மும்பை அணி 18.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 129 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஹர்மன்பிரீத் (46) அவுட்டாகாமல் இருந்தார்.