Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/சாய் சுதர்சன் நீக்கமா * இரண்டாவது டெஸ்டில் சந்தேகம்

சாய் சுதர்சன் நீக்கமா * இரண்டாவது டெஸ்டில் சந்தேகம்

சாய் சுதர்சன் நீக்கமா * இரண்டாவது டெஸ்டில் சந்தேகம்

சாய் சுதர்சன் நீக்கமா * இரண்டாவது டெஸ்டில் சந்தேகம்

ADDED : ஜூன் 26, 2025 11:10 PM


Google News
Latest Tamil News
பர்மிங்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் காயம் காரணமாக சாய் சுதர்சன் நீக்கப்பட வாய்ப்புள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. லீட்சில் நடந்த முதல் டெஸ்டில் பேட்டர்கள் சிறப்பாக செயல்பட்ட போதும் (465, 364 ரன்), பவுலிங், மோசமான பீல்டிங் காரணமாக தோற்க நேரிட்டது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், பர்மிங்ஹாமில் ஜூலை 2ல் துவங்குகிறது.

இதற்கான இந்திய அணியில் இருந்து சாய் சுதர்சன் நீக்கப்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தை சேர்ந்த இவர், லீட்சில் அறிமுக டெஸ்டில் களமிறங்கினார். முதல் இன்னிங்சில் 'டக்' அவுட்டான சுதர்சன், இரண்டாவது இன்னிங்சில் 30 ரன் மட்டும் எடுத்தார். தவிர, கடைசி நாளில் பீல்டிங் செய்த போது, தோளில் காயம் அடைந்துள்ளார்.

ஒருவேளை காயம் சரியாகாத பட்சத்தில் சுதர்சன் நீக்கப்பட்டு, அபிமன்யு ஈஸ்வரன் சேர்க்கப்படலாம். சமீபத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில், இவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

தவிர, இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம். இதன் படி, சுதர்சன் இடத்தில் கருண் நாயரை களமிறக்கும் திட்டம் உள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடிய ஆல் ரவுண்டர் நிதிஷ் குமார் சேர்க்கப்படலாம். இதனால் பின் வரிசை பேட்டிங் பலமாகும். வேகப்பந்து வீச்சிலும் இவர் கைகொடுப்பார்.

பும்ரா சந்தேகம்

வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, முழு உடற்தகுதியுடன் முதல் டெஸ்டில் பங்கேற்றார். எனினும் இத்தொடரில் 3 போட்டியில் மட்டும் களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பர்மிங்ஹாம் போட்டியில் பும்ரா, பணிச்சுமையை குறைக்கும் வகையில், அவருக்கு ஓய்வு தரப்படலாம். பும்ராவுக்குப் பதில் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு அறிமுக வாய்ப்பு தரப்பட வாய்ப்புள்ளது.

ஆர்ச்சர் வருகை

இரண்டாவது டெஸ்டில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. காயத்தில் இருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி விபரம்:

ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், சோயப் பஷிர், பெத்தெல், புரூக், கார்ஸ், சாம் குக், கிராவ்லே, டக்கெட், ஓவர்டன், போப், ரூட், ஜமை ஸ்மித், ஜோஷ் டங்க், வோக்ஸ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us