ADDED : ஜூன் 12, 2025 11:04 PM

பெக்கென்ஹாம்: ''கோலி, ரோகித், அஷ்வின் என சீனியர்கள் இல்லாத நிலையில், இளம் வீரர்கள் துணிச்சலாக செயல்பட வேண்டும்,'' என காம்பிர் வலியுறுத்தினார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் ஜூன் 20ல் லீட்சில் துவங்குகிறது. இதுகுறித்து இந்திய அணி பயிற்சியாளர் காம்பிர் 43, கூறியது:
இங்கிலாந்து தொடரில் மூன்று அனுபவம் வாய்ந்த வீரர்கள் (கோலி, ரோகித், அஷ்வின்) இல்லாமல் களமிறங்குகிறோம். இதனால், தேசத்திற்காக சிறப்பாக செயல்பட, மற்ற வீரர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த காரணங்களால், இங்கிலாந்து தொடர் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது அணியில் உள்ள வீரர்களை பார்க்கும் போது, போட்டிகளில் எப்படியும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம், அர்ப்பணிப்பு உணர்வு, துடிப்பாக செயல்பட வேண்டும் என்ற வேகம், நன்கு தெரிகிறது. இதற்காக பல்வேறு விஷயங்களை தியாகம் செய்ய வேண்டும். வீரர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு பந்தையும் துணிச்சலாக விளையாடினால், இத்தொடரை மறக்க முடியாததாக மாற்ற முடியும்.
நமது இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக செயல்படுவதை விட, வேறெதுவும் பெரியது இங்கு இல்லை. தற்போது, முதன் முறையாக டெஸ்ட் அணி கேப்டனாக செயல்படும் சுப்மன் கில், துணைக் கேப்டன் ரிஷாப் பன்ட்டுக்கு வாழ்த்துகள்.
அணியில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் திரும்புவது அவ்வளவு எளிதல்ல. கடந்த ஆண்டு உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட கருண் நாயர், 7 ஆண்டுக்குப் பின் அணியில் இடம் பெற்றுள்ளது வியக்கத்தக்கது. இவர், வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வார் என நம்புகிறேன். 'டி-20'ல் ஜொலித்த வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், டெஸ்டிலும் விக்கெட் வேட்டை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுதர்சனுக்கு வாழ்த்து
காம்பிர் கூறுகையில்,'' முதல் டெஸ்ட் என்பது எப்போதும் ஸ்பெஷலானது. கடந்த மூன்று மாதம் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட சாய் சுதர்சன், தனது டெஸ்ட் வாழ்க்கையை 'ஸ்பெஷலாக' மாற்றுவார் என்பது உறுதி,'' என்றார்.
பயிற்சி போட்டி துவக்கம்
டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில், இந்திய வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து, நான்கு நாள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்கின்றனர். தினமும் 90 ஓவர் என மொத்தம் 360 ஓவர்கள் வீசப்பட உள்ளன.