ADDED : ஜூலை 22, 2024 11:08 PM

தம்புலா: கேப்டன் சமாரி சதம் விளாச, இலங்கை அணி 144 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கையின் தம்புலாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை ('டி-20') 9வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் இலங்கை, மலேசியா அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இலங்கை அணிக்கு கேப்டன் சமாரி அத்தப்பத்து, 69 பந்தில் 119 ரன் (7 சிக்சர், 14 பவுண்டரி) விளாசினார். ஹர்ஷிதா (26), அனுஷ்கா சஞ்ஜீவனி (31) ஓரளவு கைகொடுத்தனர். இலங்கை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 184 ரன் எடுத்தது.
கடின இலக்கை விரட்டிய மலேசிய அணி 19.5 ஓவரில் 40 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. அதிகபட்சமாக எல்சா ஹன்டர் 10 ரன் எடுத்தார். இலங்கை சார்பில் ஷசினி கிம்ஹானி 3, காவ்யா, கவிஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இலங்கை, தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டது.
இந்தியா-நேபாளம் மோதல்
'ஏ' பிரிவு இன்று நடக்கும் லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, நேபாளம் அணிகள் மோதுகின்றன. முதலிரண்டு போட்டியில் பாகிஸ்தான், யு.ஏ.இ., அணிகளை வீழ்த்திய இந்தியா, மீண்டும் அசத்தினால் 'ஹாட்ரிக்' வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழையலாம். யு.ஏ.இ., அணியை வென்ற நேபாளம், பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க இன்று வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.
வங்கதேசம் அபாரம்
மற்றொரு 'பி' பிரிவு லீக் போட்டியில் வங்கதேசம், தாய்லாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தாய்லாந்து அணிக்கு நட்டாயா (40) கைகொடுக்க, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 96 ரன் எடுத்தது. வங்கதேச அணிக்கு முர்ஷிதா (50) அரைசதம் விளாச, 17.3 ஓவரில் 100/3 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.