ADDED : பிப் 25, 2024 08:58 PM

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான 3வது 'டி-20' போட்டியில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 3-0 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.
நியூசிலாந்து சென்ற ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா 2-0 என ஏற்கனவே தொடரை தட்டிச் சென்றது. ஆக்லாந்தில் மூன்றாவது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் (4) ஏமாற்றினார். டிராவிஸ் ஹெட் (33), மாத்யூ ஷார்ட் (27), மேக்ஸ்வெல் (20) ஓரளவு கைகொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 72/2 (6.2 ஓவர்), 95/3 (8.3 ஓவர்), 118/4 (10.4 ஓவர்) என ரன் எடுத்திருந்த போது போட்டி மழையால் நிறுத்தப்பட்டது. ஜோஷ் இங்லிஸ் (14), டிம் டேவிட் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.
மழை நின்ற பின் நியூசிலாந்தின் வெற்றிக்கு 10 ஓவரில் 126 ரன் என 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆலன் (13), வில் யங் (14), டிம் செய்பெர்ட் (2) சோபிக்கவில்லை. பிலிப்ஸ், மார்க் சாப்மன் ஜோடி ஆறுதல் தந்தது. நியூசிலாந்து அணி 10 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 98 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. பிலிப்ஸ் (40), சாப்மன் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் ஷார்ட் வென்றார். தொடர் நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் மிட்சல் மார்ஷ் கைப்பற்றினார்.