/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: உலக கோப்பையில் அதிர்ச்சிஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: உலக கோப்பையில் அதிர்ச்சி
ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: உலக கோப்பையில் அதிர்ச்சி
ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: உலக கோப்பையில் அதிர்ச்சி
ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: உலக கோப்பையில் அதிர்ச்சி

வலுவான துவக்கம்
ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜத்ரன் வலுவான அடித்தளம் அமைத்தனர். ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பதை உணர்ந்து 'கூலாக' ஆடினர். அவ்வப்போது பவுண்டரி, சிக்சர் அடித்து அசத்தினர். இவர்களை ஆஸ்திரேலிய பவுலர்களால் அசைக்க முடியவில்லை. 15 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 109/0 ரன் எடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 118 ரன் சேர்த்த நிலையில், ஸ்டாய்னிஸ் பந்தில் குர்பாஸ் (60) வெளியேறினார். ஜாம்பா 'சுழலில்' ஜத்ரன் (51) சிக்கினார்.
குல்பதின் மிரட்டல்
ஆஸ்திரேலியாவின் 'மிடில் ஆர்டரை' நொறுக்கினார் குல்பதின் நைப். இவரது 'வேகத்தில்' ஸ்டாய்னிஸ் (11), டிம் டேவிட் (2) அவுட்டாகினர். தனிநபராக போராடிய மேக்ஸ்வெல் அரைசதம் கடந்தார். குல்பதின் பந்தில் மேக்ஸ்வெல் (59) வெளியேற, ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை தகர்ந்தது. வேட் (5), கம்மின்ஸ்(3) உள்ளிட்ட 'டெயிலெண்டர்கள்' கைகொடுக்க தவற, ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவரில் 127 ரன்னுக்கு சுருண்டு அதிர்ச்சி தோல்வி அடைந்தது.ஆப்கானிஸ்தான் சார்பில் குல்பதின் 4, நவீன் உல்-ஹக் 3 விக்கெட் வீழ்த்தினர்.
கம்மின்ஸ் மீண்டும் 'ஹாட்ரிக்'
வங்கதேசத்திற்கு எதிராக 'ஹாட்ரிக்' சாதனை படைத்த ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் நேற்றும் அசத்தினார். 18வது ஓவரின் கடைசி பந்தில் ரஷிக் கானை (2) அவுட்டாக்கினார். பின் 20வது ஓவரின் முதலிரண்டு பந்துகளில் ஜனத் (13), குல்பதினை (0) வெளியேற்றினார். 3வது பந்தை கரோட்டி துாக்கி அடித்தார். இதை வார்னர் பிடிக்க தவறியதால், 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு நழுவியது. இருப்பினும் தொடர்ந்து 3 விக்கெட் வீழ்த்தி 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார். 'டி-20' உலக கோப்பை அரங்கில் இரண்டு 'ஹாட்ரிக்' சாதனை படைத்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் கம்மின்ஸ். ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததால், இவரது சாதனை வீணானது.
முதல் முறை
சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, தனது முதல் வெற்றியை ஆப்கானிஸ்தான் பெற்றது. இவ்விரு அணிகளும் 6 முறை (2 'டி-20', 4 ஒருநாள் போட்டி) மோதியுள்ளன.
குல்பதின் பெருமிதம்
ஆப்கன் வெற்றி நாயகன் குல்பதின் கூறுகையில்,''ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பெரிய சாதனை. இதற்காக நீண்ட காலம் காத்திருந்தோம். எங்கள் தேசத்திற்கு பெருமையான தருணம்,'' என்றார்.
துாங்க முடியல...
மும்பையில் 2023, நவ. 7ல் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 291/5 ரன் எடுத்தது. பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 18.3 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 91 ரன் எடுத்து தவித்தது. இந்த சமயத்தில் மேக்ஸ்வெல் கைகொடுத்தார். இவர், 201 ரன்* (21 பவுண்டரி, 10 சிக்சர்) விளாச, ஆஸ்திரேலியா 46.5 ஓவரில் 293/7 ரன் எடுத்து வென்றது. நேற்று மேக்ஸ்வெல் அரைசதம் கடந்த போதும், அணியை கரை சேர்க்க முடியவில்லை.
பிராவோ காரணம்
ஆப்கானிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ உள்ளார். இவரது ஆலோசனைப்படி குல்பதின் 'ஸ்லோ' பந்துகளை வீசினார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஆஸ்திரேலியாவை வென்ற ஆப்கானிஸ்தான் அணியினர் பிராவோவின் 'சாம்பியன்' பாடலுக்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்தனர்.