/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாரம்பரியம்மிக்க புதுச்சேரி சட்டசபை டிஜிட்டலாகிறது! காகிதமில்லா நடைமுறைக்கு டெண்டர்பாரம்பரியம்மிக்க புதுச்சேரி சட்டசபை டிஜிட்டலாகிறது! காகிதமில்லா நடைமுறைக்கு டெண்டர்
பாரம்பரியம்மிக்க புதுச்சேரி சட்டசபை டிஜிட்டலாகிறது! காகிதமில்லா நடைமுறைக்கு டெண்டர்
பாரம்பரியம்மிக்க புதுச்சேரி சட்டசபை டிஜிட்டலாகிறது! காகிதமில்லா நடைமுறைக்கு டெண்டர்
பாரம்பரியம்மிக்க புதுச்சேரி சட்டசபை டிஜிட்டலாகிறது! காகிதமில்லா நடைமுறைக்கு டெண்டர்
ADDED : பிப் 12, 2024 06:40 AM

அனைத்து மாநில சட்டசபை மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டசபை நிகழ்வுகளை ஒரே இணையதள பக்கத்தில் கொண்டு வரும் நோக்கில், மத்திய பார்லிமெண்ட் விவகாரத் துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக நேஷனல் 'இ-விதான் -நேவா' அதாவது காகிதமில்லா சட்டசபை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நேவா திட்டம் காகிதமில்லா சட்டசபை என்பது இ-அசெம்பிளி என்ற நோக்கத்தின் அடிப்படையில், சட்டசபை பணிகளை மின்மயமாக்கும் திட்டமாகும்.இத்திட்டத்தின் கீழ் அனைத்து மாநில சட்டசபைகளும்காகிதமில்லாத நடைமுறைக்கு மாறி வருகின்றன.
பாரம்பரியம்மிக்க புதுச்சேரி சட்சபையும் காகிதமில்லாத நடைமுறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு, அதற்கான டெண்டர் பணிகளை தற்போது துவக்கியுள்ளது. வரும் 28ம் தேதி வரை டெண்டர் விண்ணப்பத்தினை சட்டசபை செயலகம் இணைய தளம் மூலம் வரவேற்றுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பாரம்பரிய சட்டசபை மண்டபமும் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. பேரவை மண்டபத்தில் டிஜிட்டல் திரைகள், ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களின் இருக்கையின் முன் தொடுதிரை வசதியுடன் கூடிய திரைகள், கையடக்க கணினி என, பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட உள்ளது.
என்ன சிறப்பு
இது சட்டசபை அனைத்து சட்டம் இயற்றும் வழிமுறை களையும் தானியங்கி முறையில் எளிமைப்படுத்துவதுடன், முடிவுகள் மற்றும் ஆவணங்களைக் கண்காணிப்பதற்கும், தகவல்களைப் பரிமாறவும் வழிவகுக்கும்.
இத்திட்டம் அனைத்து மாநில சட்டசபைகளையும் ஒன்றிணைத்து, அவை தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய இமாலய தரவுக் களஞ்சியத்தை உருவாக்க முடியும். மேலும் பல செயலிகளின் பயன்பாடுகள் இல்லாமல், ஒரே தளத்தின் கீழ் பரிமாறிக் கொள்ளவும் முடியும்.
நேவா திட்டத்தின் மூலம், எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் கையடக்க சாதனங்கள் வாயிலாக தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே சபை நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள முடியும். பொதுமக்களும் எளிதாக தகவல்களைப் பெறலாம். சட்டசபை கூட்டத்தொடரின்போது, அவை முன் வைக்கப்படும் ஏடுகள் அனைத்தையும் மின்னஞ்சல் மூலமாகவே எம்.எல்.ஏ.,க்களுக்கு அனுப்பி வைக்கவும் முடியும்.
விரிவாக்கம் செய்யலாமே
சட்டசபை மட்டுமல்லாது அனைத்து அரசு துறைகளிலும் காகிதமில்லாத நடைமுறையைஏற்படுத்த வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் மின்னணு மாவட்டத்தின் கீழ், மின்னணு அலுவலகங்களாக மாற்ற புதுச்சேரி அரசு முனைப்பும் எடுத்தது.
ஆனால் போதிய நிதி இல்லாமல் அரசு ஊழியர்களின் சம்பள பில்கள், செலவு பில்கள் தவிர்த்து பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை.
அதிகாரமிக்க சட்டசபை காகிதமில்லாத நடைமுறையின் கீழ் கொண்டு வரும்போது, அதற்கு பக்கபலமாக இருக்கும் அரசு துறைகளிலும் காகிதமில்லாத நடைமுறையை முழுமையாக அமல்படுத்தினால், கோப்புகள் விரைவாக நகரும்.
மேலும் கோப்புகளை காகிதம் வழியாக அனுப்பாமல் ஒவ்வொரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கும், ஒரு அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து மற்றொரு அமைச்சரின் அலுவலகத்திற்கும் ஆன்-லைன் வழியாகவே அனுப்பிவிட முடியும்.
எனவே அரசு துறைகள் முழுதுமாக காகிதமில்லாத நடைமுறைக்கு மாற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.