ADDED : மார் 22, 2025 09:48 PM
நெட்டப்பாக்கம் மலட்டாறில் பல ஆண்டுகளாக மணல் கொள்ளை நடந்து வருகிறது.
கடந்த காலங்களில் கவர்னராக இருந்த கிரண்பேடி நடவடிக்கையால், மணல் கொள்ளை என்பது கட்டுக்குள் இருந்தது. தற்போது மீண்டும் பண்டசோழநல்லுார், வடுக்குப்பம், நெட்டப்பாக்கம் மலட்டாற்றில் மணல் கொள்ளை அறங்கேறி வருகிறது.
பண்டசோழநல்லுார், வடுக்குப்பம் பகுதியில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள் மூலமாக மணல் கொள்ளை தினசரி நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
காவல்துறை, வருவாய்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவரவர் தகுதிக்கேற்ப வசூல் வேட்டையில் ஈடுபட்டு மணல் கொள்ளையை கண்டுக்கொள்ளாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மணல் கொள்ளையால் மலட்டாறு ஆற்றுப் படுகையில் நீர் ஆதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் மலட்டாறு கட்டாந்தரையாக மாறி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்கும் வகையில் மலட்டாறு பகுதியில் படுக்கை அணை கட்ட நடவடிக்கை எடுத்து, மலட்டாறில் தொடரும் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.