/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓடி ஒளியும் ஆசிரியர்களால் கிராமப்புற மாணவர்கள் தவிப்பு ஓடி ஒளியும் ஆசிரியர்களால் கிராமப்புற மாணவர்கள் தவிப்பு
ஓடி ஒளியும் ஆசிரியர்களால் கிராமப்புற மாணவர்கள் தவிப்பு
ஓடி ஒளியும் ஆசிரியர்களால் கிராமப்புற மாணவர்கள் தவிப்பு
ஓடி ஒளியும் ஆசிரியர்களால் கிராமப்புற மாணவர்கள் தவிப்பு
ADDED : ஜூன் 22, 2025 01:54 AM

அரசு பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்களின் கற்றல் திறன் பாதிப்பதாக பல்வேறு தரப்பிலும் புகார் எழுந்தது. ஆசிரியர் சங்கங்களும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, கோரிக்கை விடுத்தன.
அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்த மார்ச் மாதம், புதுச்சேரி பிராந்தியத்திற்கு 190 ஆசிரியர்கள், காரைக்காலுக்கு 140 ஆசிரியர்கள், ஏனாமிற்கு 5 ஆசிரியர்கள் மற்றும் மாகிக்கு 8 ஆசிரியர்கள் என மொத்தம் 343 பேர் புதிதாக நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கல்வி ஆண்டு துவங்கி, கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறந்து 20 நாட்களாகிவிட்டது. ஆனால், கிராமப்புற பள்ளிகளில் கடந்தாண்டு நிலவிய அதே ஆசிரியர் பற்றாக்குறை தற்போதும் நிலவுகிறது.
காரணம், புதிதாக நியமிக்கப்பட்ட மற்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், கிராமப்புற பள்ளிகளுக்கு பணிக்கு வர தயக்கம் காட்டுகின்றனர். அவர்களில், பலர் தங்களது அரசியல் மற்றும் அதிகாரிகளின் செல்வாக்கை பயன்படுத்தி, அலுவலகப் பணி என, நகரப் பகுதிகளிலேயே உள்ளனர்.
இதனால், கிராமங்களில் உள்ள பள்ளி ஆசிரியர்களின் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருவதால், மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை கல்வித்துறை அமைச்சரின் தொகுதியிலேயே நிலவுவதான் வேதனையிலும் வேதனை.
இதற்கிடையே, சமீபத்தில் அலுவலகப் பணிக்காக எல்.டி.சி., யூ.டி.சி., காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், கிராமப்புற பள்ளிகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், அலுவலகப் பணி என்று எங்கே செல்கின்றனர் என்பது புரியாத புதிராக உள்ளது.
எனவே, கிராமப்புற பள்ளிகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் உடனடியாக பணியில் சேர்ந்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அவர்களை நீக்கிவிட்டு புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, கிராமப்புற மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வரும் அரசு, கிராமப்புற பள்ளிகளில் நிலவி வரும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.