Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி அரசு பள்ளிகள் துவங்கும் நேரம்... மாற்றம்; 7 ஆக இருந்த பாடவேளைகள் 8 ஆக அதிகரிப்பு

புதுச்சேரி அரசு பள்ளிகள் துவங்கும் நேரம்... மாற்றம்; 7 ஆக இருந்த பாடவேளைகள் 8 ஆக அதிகரிப்பு

புதுச்சேரி அரசு பள்ளிகள் துவங்கும் நேரம்... மாற்றம்; 7 ஆக இருந்த பாடவேளைகள் 8 ஆக அதிகரிப்பு

புதுச்சேரி அரசு பள்ளிகள் துவங்கும் நேரம்... மாற்றம்; 7 ஆக இருந்த பாடவேளைகள் 8 ஆக அதிகரிப்பு

ADDED : ஜூலை 10, 2024 05:14 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின்படி, அரசு பள்ளிகளில் தினசரி 7 ஆக இருந்த பாடவேளை, 8 ஆக உயர்த்தியதுடன், பள்ளிகள் துவங்கும் நேரம் காலை 9:00 மணி என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தொடக்க பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 416 அரசு பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாட திட்டம், இந்தாண்டு சி.பி.எஸ்.இ., பாட திட்டம் கொண்டுவரப்பட்டு, அனைத்து அரசு பள்ளிகளும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளாக மாற்றப்பட்டன.

சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின்படி, தினசரி பாட வேளை வகுப்புகள், 7 இல் இருந்து 8 ஆக உயர்த்தியதுடன், பள்ளிகள் துவங்கும் நேரத்தையும் புதுச்சேரி பள்ளி கல்வித்துறை மாற்றம் செய்துள்ளது.

பழைய டைம் டேபிள்


புதுச்சேரி நகர பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் காலை 9:00 மணிக்கு துவங்கும். காலை 9:15 வரை காலை வழிபாடும், அதன்பின்பு மதியம் 12:55 வரை, தலா 45 நிமிடம் வீதம் 4 பாடவேளைகள் நடக்கும். இடையில், 10:45 முதல் 10:55 வரை ஒரு இடைவெளி விடப்படும்.

மதியம் 12:55 முதல் 1:30 மணி வரை உணவு இடைவெளையும், மதியம் 1:30 முதல் 3:45 வரை மூன்று பாடவேளை முடிந்து பள்ளி முடியும். கிராமப்புற பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நீண்ட துாரம் செல்ல வேண்டி இருப்பதால் கிராமப்புற பள்ளிகள் நேரம் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி, கிராமப்புற பள்ளிகள் காலை 9:30 மணிக்கு துவங்கும். காலை 9:30 மணி முதல் 9:45 மணி வரை காலை வழிபாடு. அதன்பின்பு வகுப்புகள் துவங்கி மதியம் 12:50 மணிக்கு முடியும். காலை 11:15 முதல் 11:25 வரை 10 நிமிடம் இடைவேளை. மதியம் 12:55 முதல் மதியம் 2:00 மணி வரை உணவு இடைவேளை விடப்படும். மதியம் 2:00 முதல் மாலை 4:15 மணி வரை 3 பாடவேளையுடன் பள்ளிகள் முடியும்.

கல்வித்துறை அறிவிப்பு


புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி அனுப்பியுள்ள சுற்றறிக்கை;

சி.பி.எஸ்.இ., வாரியத்துடன் அனைத்து அரசு பள்ளிகளும் இணைக்கப்பட்டுள்ளதால், அரசு பள்ளிகளின் செயல்பாடுகளை சீரமைப்பதிற்கும், சீரான தன்மையை உறுதி செய்வதற்கும் கல்வித்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் 15ம் தேதி முதல் ஒரே மாதிரியான கால அட்டவணை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சி தினசரி அட்டவணை, அனைத்து வகுப்புகளிலும் கற்பித்தல், கற்றல் செயல்முறைகளை மேம்படுத்தும் நோக்கமாக கொண்டுள்ளது.

தொடக்க பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான சீரான கால அட்டவணையை வரும் 15ம் தேதி முதல் செயல்படுத்த, சி.பி.எஸ்.இ., வாரியம் வழங்கிய வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு பாடவேளை அட்டவணை வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே, அனைத்து பள்ளிகளின் தலைவர்களும் சீரான பாடவேளை அட்டவணையை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

புது டைம் டேபிள்


அனைத்து அரசு பள்ளிகளும் காலை 9:00 மணிக்கு துவங்கும். காலை 9:00 மணி முதல் 9:15 மணி வரை காலை வழிப்பாடு. 9:15 மணி முதல் மதியம் 12:25 வரை 4 பாடவேளைகள் தலா 45 நிமிடம் நடக்கும். இதில், காலை 10:45 முதல் 10:55 வரை 10 நிமிடம் முதல் இடைவேளை விடப்படும்.

மதியம் 12:25 முதல் மதியம் 1:30 வரை உணவு இடைவேளை. மதியம் 1:30 முதல் மாலை 4:20 வரை 4 பாடவேளைகள் தலா 40 நிமிடம் நடக்கும். இதில் 2:50 முதல் மதியம் 3:00 மணி வரை 2வது இடைவேளை.

புதிய பாடவேளை கால அட்டவணைப்படி, தினசரி நடந்து வந்த 7 பாடவேளை, இனி 8 பாடவேளைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் துவங்கும் நேரமும் கிராம், நகரம் என பிரித்து பார்க்காமல், அனைத்து அரசு பள்ளிகளும் காலை 9:00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

எதிரொலி

நகர பகுதியில் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் துவங்கும் நேரம் 8:30 மற்றும் 8:45 ஆக உள்ளதால் கடும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. பள்ளிகள் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் கடந்த வாரம் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, நகர பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் காலை 8:45 மணிக்கு பதில் 9:00 மணிக்கு துவங்கும் என, மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நகர பகுதியில் காலை நேர போக்குவரத்து நெரிசல் சற்று குறையும்.



கிராமப்புற ஆசிரியர்கள் கோரிக்கை

அரசு பள்ளிகளில் 80 சதவீத ஆசிரியர்கள் பெண்கள். காலை நேர தங்களின் அன்றாட வீட்டு பணிகளை முடித்து விட்டு பள்ளிக்கு புறப்பட்டு செல்வர். நகர பகுதியில் இருந்து மடுகரை, நெட்டபாக்கம், பாகூர், திருக்கனுார், பி.எஸ்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு போதுமான காலை நேரத்தில் பஸ்கள் இல்லை. இந்நிலையில், காலை 9:30 மணிக்கு பதில் 9:00 மணிக்கு பள்ளிகள் துவங்கும் என மாற்றப்பட்டுள்ளது கிராமப்பகுதியில் பணியாற்றும் பெண் ஆசிரியர்களுக்கு சிரமத்தை கொடுக்கும்.கிராமப்புற பள்ளிகளில் 8 பாடவேளையும் தலா 40 நிமிடங்களாகவும், மதிய உணவு இடைவெளி நேரத்தை குறைத்தால் கிடைக்கும் கூடுதல் நேரத்தை பயன்படுத்தி காலை 9:30 மணிக்கு துவங்கி மாலை 4:20 மணிக்கு முடிக்க முடியும் என, கிராமப்புற ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us