/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சுற்றுலா படகுகள் இயக்க எதிர்ப்பு: மீனவர்கள் போராட்டம்சுற்றுலா படகுகள் இயக்க எதிர்ப்பு: மீனவர்கள் போராட்டம்
சுற்றுலா படகுகள் இயக்க எதிர்ப்பு: மீனவர்கள் போராட்டம்
சுற்றுலா படகுகள் இயக்க எதிர்ப்பு: மீனவர்கள் போராட்டம்
சுற்றுலா படகுகள் இயக்க எதிர்ப்பு: மீனவர்கள் போராட்டம்
ADDED : ஜன 01, 2024 05:57 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் சுற்றுலா படகுகளை இயக்க எதிர்ப்பு தெரிவித்து, கடலில் கட்டுமரங்களை கொண்டு தடுப்பு ஏற்படுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தேங்காய்த்திட்டு பகுதி ஆற்றின் முகத்துவாரத்தில் படகு பயணம் செய்வதை விரும்புகின்றனர். இதனால் புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை மூலம், ஆற்றுப்பகுதியில் படகுகளை இயக்க சில நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், புற்றீசல் போல, 100க்கும் மேற்பட்ட படகுகள் சுற்றுலா பயணிகளுக்காக பாதுகாப்பின்றி இயக்கப்பட்டன. படகு சவாரியின்போது, சென்னையில் இருந்து வந்த ஒரு தம்பதி விழுந்து காயமடைந்தனர்.
இதனால் பாதுகாப்பு கருதி, சுற்றுலா படகுகள் இயக்குவதை அரசு தடை செய்தது. மேலும், முறையாக அனுமதி பெற்று, பாதுகாப்புடன் படகுகளை இயக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என, அறிவித்தது.
அதன்படி புதுச்சேரியில், 300க்கும் மேற்பட்டோர் சுற்றுலா படகுகளை இயக்க அனுமதி கோரினர். ஆனால் அனுபவம் கொண்ட, 8 நிறுவனங்களுக்கு மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர். பலர் கடலில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். இந்த படகுகளை துறைமுக பகுதியில் இருந்து இயக்குவதால், மீன் பிடி தொழில் பாதிப்பதாக மீனவர்கள் குற்றம் சாட்டினர்.
இதனிடையே சுற்றுலாப் படகுகள் இயக்கப்படுவதை கண்டித்து புதுச்சேரி மீனவர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். துறைமுகத்தை நோக்கி வரும் பகுதியில் கட்டுமரங்களை குறுக்கே நிறுத்தி வலை வீசி போராட்டம் நடத்தினர்.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், 'முகத்துவாரம் பகுதியில், படகுகள் இயக்கப்படுவதால் மீன்வளம் பாதிக்கிறது. இறால் முட்டைகள், மீன் குஞ்சுகள் அழிந்து வருகின்றன.
இதனால் மீன் பிடி தொழில் பாதிக்கிறது. அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அனைத்து மீனவர்களுடன் தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம் ,' என்றனர்.