Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுநகரில் விஷவாயு தாக்கியது... எப்படி; திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

புதுநகரில் விஷவாயு தாக்கியது... எப்படி; திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

புதுநகரில் விஷவாயு தாக்கியது... எப்படி; திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

புதுநகரில் விஷவாயு தாக்கியது... எப்படி; திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

ADDED : ஜூன் 12, 2024 07:22 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : பாதாள சாக்கடையில் விஷவாயு எவ்வாறு உருவாகியது, எப்படி பரவியது என, திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

புதுச்சேரி ரெட்டியார்பாளையம், புதுநகர் 4வது குறுக்கு தெரு மக்களுக்கு நேற்று காலை சோகத்துடன் விடிந்தது. இப்பகுதியில், பாதாள சாக்கடையுடன் இணைக்கப்பட்ட கழிவறைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.

வழக்கமாக வரக்கூடிய துர்நாற்றம் தான் என நினைத்து கழிவறைக்கு சென்ற சிறுமி, மூதாட்டி மற்றும் பெண் என, அடுத்தடுத்து 5 பேர் மயங்கி விழ, புது நகரே பரபரப்பாகியது.

வீடுகளில் இருந்து அனைவரும் வெளியே ஓடி வந்தனர். மயங்கி விழுந்தவர்களை ஆட்டோக்கள் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், இதில் சிறுமி, மூதாட்டி பெண் என மூவர் உயிரிழந்தனர்.2 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இச்சம்பவம் புதுச்சேரி முழுதும் கடும் பீதியை உருவாக்கி உள்ளது.

புதுச்சேரி நகர பகுதி மற்றும் அதனை ஓட்டியுள்ள பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் பாதாள சாக்கடையில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டில் இருந்தும் வெளியேறும் கழிவுநீர் குழாய்கள் வழியாக பாதாள சாக்கடையின் மேன்ஹோலுக்கு செல்கிறது. அங்கிருந்து, கழிவுநீர் உருஞ்சி எடுத்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

திட கழிவுகளை தனியாக பிரித்து கழிவுநீரை சுத்திகரித்து வாய்க்காலில் விடுகின்றனர். சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கழிவுநீரை உறிஞ்சி எடுக்கும்போது, குழாயில் சில இடங்களில் காற்று வெற்றிடம் உருவாகும்.

அப்போது, அங்கு விஷவாயு உருவாகி வெற்றிடத்தை நிரப்ப வாய்ப்பு உள்ளது. சில நேரம் கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டும் போது, மேன்ஹோலில் தேங்கி நிற்கும் கழிவுகளால் மீத்தேன், நைட்ரஜன் சல்பைடு, அமோனியா உள்ளிட்ட வாயுக்கள் உருவாகும்.

புதுநகர் பகுதியில் சிறிய வீடுகளில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அங்கு, கழிப்பறை கட்டுவதிற்கு மட்டுமே இடம் உள்ளது.

இதனால் பலர் கழிவறையில் இருந்து பாதாள சாக்கடைக்கு செல்லும் குழாயில் வாயு வராதபடி 'எஸ்' அல்லது 'பி' பென்ட் வடிவ அமைப்பு ஏற்படுத்தவில்லை.

இதனால் மேன்ஹோலில் உருவான விஷ வாயு, கழிவறை வழியாக வெளியேறி உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என, நிபுணர்கள் தெரிவித்தனர்.

தடுப்பது எப்படி


ஒவ்வொரு வீட்டிலும் பாதாள சாக்கடையில் இணைப்பு கொடுக்க வேண்டும் என்றால், பொதுப்பணித்துறையில் தகவல் தெரிவித்து விட்டு, அத்துறையின் லைசன்ஸ் பெற்ற பிளம்பர் மூலம் பணிகளை செய்யலாம்.

பாதாள சாக்கடை இணைப்புகள் சரியாக கொடுக்கப்பட்டுள்ளதா, பாதாள சாக்கடையில் உருவாகும் துர்நாற்றம், விஷவாயு கழிப்பறை வழியாக வராமல் இருக்க எஸ் அல்லது பி பென்ட் அமைக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்க வேண்டும்.

கழிப்பறையில் இருந்து செல்லும் குழாய்க்கும், பாதாள சாக்டையில் இணைக்கும் குழாய் இடையில் சிறிய சதுர அடியில் தொட்டி கட்டி காற்று வெளியேற வென்ட் அமைத்தால் இதுபோன்ற விஷவாயு தாக்கத்தை தவிர்க்கலாம்.

தங்கள் பகுதியில் பாதாள சாக்கடை மென்ஹோலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

'அன்றே சொன்னது தினமலர்'


புது நகர் அருகில் கனகன் ஏரியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, தொழிற்சாலை மற்றும் மருத்துவ கல்லுாரி கழிவுகள் நேரடியாக வருவதால், சுத்திகரிப்புநிலையம், கழிவுநீரை சுத்திகரிக்க முடியாமல் திணறுகிறது.

அதனால் உருவாகும் வாயுவால் துர்நாற்றம் அதிகரித்து, மூகாம்பிகை நகர், புது நகர் சுற்றியுள்ள குடியிருப்புகளில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது என, கடந்த மே 29ம் தேதி புகைப்படத்துடன் தினமலரில் செய்தி வெளியிடப்பட்டது.

ஆனால், அதிகாரிகள் யாரும் அதனை கண்டுகொள்ளவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us