/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இலவச அரிசி விநியோக திட்டத்தில் முறைகேடு; எதிர்க்கட்சி தலைவர் 'பகீர்' குற்றச்சாட்டுஇலவச அரிசி விநியோக திட்டத்தில் முறைகேடு; எதிர்க்கட்சி தலைவர் 'பகீர்' குற்றச்சாட்டு
இலவச அரிசி விநியோக திட்டத்தில் முறைகேடு; எதிர்க்கட்சி தலைவர் 'பகீர்' குற்றச்சாட்டு
இலவச அரிசி விநியோக திட்டத்தில் முறைகேடு; எதிர்க்கட்சி தலைவர் 'பகீர்' குற்றச்சாட்டு
இலவச அரிசி விநியோக திட்டத்தில் முறைகேடு; எதிர்க்கட்சி தலைவர் 'பகீர்' குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 14, 2025 01:07 AM

புதுச்சேரி: இலவச அரிசி விநியோக திட்டத்தில் முறைகேடு நடக்கிறது. இந்த முறைகேட்டினை தனிநபர் செய்ய முடியாது. கடை நிலை முதல் உயர்நிலை வரை இதில் தொடர்பு உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் சிவா பரபரப்பான குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார்.
இது குறித்து அவர், கூறியதாவது:
புதுச்சேரியில் ஏழை மக்களுக்கு, ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச அரிசியில் பெரும் முறைகேடுகள் நடந்து வருகிறது. இலவச அரிசி விநியோகத்தில் முறையாக டெண்டர் விடுவது போல் நாடகமாடி, தனக்கு சாதகமான ஒரு வடநாட்டுக் கம்பெனியுடன் கூட்டு சேர்ந்து அதிகாரிகள் கொள்ளையடித்துள்ளனர். இதனால், உண்மையாக பயன்பெற வேண்டிய ஏழை விவசாயிகள், உள்ளூர் அரிசி ஆலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2024ல் ரேஷனில் அரிசி வழங்கும் டெண்டரில் தனக்கு சாதகமான வடநாட்டு கம்பெனிக்கு ஆதரவாக அவர்கள் மட்டுமே பங்கு பெற்று தேர்வாகும் வகையில் டெண்டர் வடிவமைக்கப்பட்டு அவர்களுக்கே டெண்டரும் கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த எந்த மில்லும் இந்த டெண்டரில் கலந்து கொள்ளவில்லை.
ஒரு கிலோ அரிசி ரூ.47.70 பைசா நிர்ணயம் செய்யப்பட்டு, புதுச்சேரி அரசு முதல் 4 மாதங்களுக்கு அரிசி வழங்க நிர்ணயிக்கப்பட்டது. தற்போது மீண்டும் 4 மாதங்களுக்கு அரிசி வழங்கும் டெண்டர், அதே வடநாட்டு நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை நீட்டித்து வழங்கி இருக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்த அரசு டெண்டரின் கீழ் புதுச்சேரி விவசாயிகளோ புதுச்சேரி அரிசி ஆலைகளோ எந்தவித ஆதாயமும் பெறவில்லை.
புதுச்சேரியில் இருந்து அரிசியோ, நெல்லோ, கொள்முதல் செய்யப்படவில்லை. புதுச்சேரியில் தற்போது ரேஷனில் வழங்கப்படும் அரிசி 100 சதவீதம் அண்டை மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு புதுச்சேரியில் வழங்கப்படுகிறது. இதனால் புதுச்சேரிக்கு ரூ 20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தனிநபர் செய்ய முடியாது. துறை அமைச்சரான முதல்வர், அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது.
இன்றைய சந்தை நிலவரப்படி, அரிசி விலை குறைந்திருக்கும் சூழலில், போன ஒப்பந்தத்தின் போது, ஒரு கிலோவிற்கு ரூ. 9 கூடுதலாக அரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அதே ஒரு கிலோ அரிசிக்கு ரூ.15 கூடுதலாக அரசு வழங்கியுள்ளது. டெண்டர் வழங்கப்பட்டு அரிசி விநியோகிக்கக்கூடிய வடநாட்டு கம்பெனிக்கு, புதுச்சேரியில் தனக்கென்று சொந்தமான அரிசி ஆலையோ, கொள்முதல் நிலையமோ இல்லை.
அப்படி இருக்க புதுச்சேரியிலுள்ள விவசாயிகளை புறக்கணித்துவிட்டு வட மாநிலத்து கம்பெனிக்கு சிகப்பு கம்பளம் விரித்தது ஏன் என்ற கேள்வியை முன்வைக்கிறேன். இந்த முறைகேடான டெண்டரை உடனே ரத்து செய்து, சிறு குறு விவசாயிகள், அரிசி ஆலைகள் பயன்பெறும் வகையில், புதுச்சேரியில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து, டெண்டரில் கலந்து கொள்ள ஏதுவாக மாற்றியமைக்க வேண்டும்.
இந்த டெண்டர் முறையாக ரத்து செய்யாவிட்டால் முதல்வர், குடிமைப் பொருள் வழங்கல் துறையை கண்டித்து இந்த வாரத்தில் போராட்டம் நடத்துவோம். குடிமை பொருள் வழங்கல் துறை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். ரேஷன் கடைகளில் ஒவ்வொரு மாதம் 70 சதவீதம் பேர் வரை மட்டுமே அரிசி வாங்கியுள்ளனர். மீதி அரிசி எங்கே சென்றது. அரசிற்கு மீண்டும் பணமாக திரும்பியதா என கேள்வி எழுகிறது. எனவே கடந்த 4 மாதங்களில் ரேஷன் அரிசி விநியோகம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
என்.ஆர்.காங்., ஆட்சியில் ஊழல் நடக்கிறது. இது ஊழல் அரசு. இது ஊர் அறிந்த விஷயம், சந்தன கட்டை முறைகேடு புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று ராஜினமா செய்யவேண்டும்.
இவ்வாறு அவர், தெரிவித்தார்.