/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வேலைவாய்ப்புகள் ஏற்படுத்த ரூ.41.7 கோடியில் புது திட்டம்: மூன்றாண்டில் 36 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க முடிவு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்த ரூ.41.7 கோடியில் புது திட்டம்: மூன்றாண்டில் 36 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க முடிவு
வேலைவாய்ப்புகள் ஏற்படுத்த ரூ.41.7 கோடியில் புது திட்டம்: மூன்றாண்டில் 36 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க முடிவு
வேலைவாய்ப்புகள் ஏற்படுத்த ரூ.41.7 கோடியில் புது திட்டம்: மூன்றாண்டில் 36 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க முடிவு
வேலைவாய்ப்புகள் ஏற்படுத்த ரூ.41.7 கோடியில் புது திட்டம்: மூன்றாண்டில் 36 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க முடிவு
ADDED : செப் 26, 2025 04:57 AM

புதுச்சேரி: 'புதுவை வெல்லும்' எனும் புதிய வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தை ஆரம்பிக்க உள்ளது. இத்திட்டத்தில்,அடுத்த மூன்றாண்டுகளில் 36 ஆயிரம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் உயர்கல்வி கேந்திரமாக புதுச்சேரி மாறி வருகிறது. சிறிய மாநிலமாக இருந்தாலும், இங்கு ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இருப்பினும், வேலைவாய்ப்பில் பின் தங்குகின்றனர். அகில இந்திய போட்டி தேர்வுகளிலும் சாதிப்பதில்லை.
தொழிற்சாலைகள் எதிர்பார்க்கும் திறன்களில் கோட்டை விடுகின்றனர். இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கான திறன்களை அதிகரிக்கும் வகையில் 'புதுவை வெல்லும்' எனும் புதிய வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தை புதுச்சேரி அரசு ஆரம்பிக்க உள்ளது.
இதற்கான பணிகளை முதல்வர் ரங்கசாமி உத்தரவின்பேரில், தொழிலாளர் துறையின் திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் 36 ஆயிரம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு 'நான் முதல்வன் திட்டம்' எனும் திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டத்தை கடந்த 2022ம் ஆண்டு ஆரம்பித்து செயல்படுத்தி வருகிறது. அதே பாணியில் இந்தத் திட்டமும் புதுச்சேரியில் 'புதுவை வெல்லும்' என்ற இலக்குடன் ஆரம்பிக்கப்பட உள்ளது. மொத்தம் நான்கு கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
முதல் திட்டம் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கானது. மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளி, கல்லுாரிகளில் தங்களுடைய எதிர்காலம் குறித்து திட்டமிட்டு, அதற்கான வேலை வாய்ப்பு திறன்களை வளர்த்து கொள்ளலாம்.
ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், இன்ஜினியரிங் அல்லாத இளநிலை பட்டதாரிகள் என, மொத்தம் மூன்று ஆண்டுகளில் 10,500 பேருக்கு பயிற்சி தர முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனர்.
இத்திட்டம் பள்ளி மாணவர், கல்லுாரி மாணவர் படிப்பில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் வெற்றி பெற உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இரண்டாம் திட்டம், வேலையில்லாத இளைஞர்களுக்கானது. இதில் 8ம் வகுப்பில் இருந்து கற்றலை விட்டவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ சான்றிதழ் வைத்துள்ளவர்கள், பட்டதாரிகள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு என, மொத்தம் 6 ஆயிரம் பேருக்கு மூன்றாண்டுகளில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மூன்றாம் திட்டம், திறமை இருந்தும் சான்றிதழ் இல்லாமல் இருப்பவர்களுக்கானது. இத்திட்டத்தின்படி ஓட்டல் உள்பட பல்வேறு துறைகளில் பணிபுரிவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிப்பதுடன், அவர்களுக்கு தேசிய அளவிலான மத்திய அரசு நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 18 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
நான்காம் திட்டம், போட்டி தேர்வுக்கானது. இத்திட்டத்தின் கீழ் யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., அனைத்து அகில இந்திய போட்டி வேலைவாய்ப்பு தேர்வுகளுக்கும் 1,500 பேருக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு திட்டத்தை புதுச்சேரி அரசு ரூ.41.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்த உள்ளது.