ADDED : மே 31, 2025 11:42 PM
சின்னஞ்சிறு மாநில மான புதுச்சேரியில் அரசியல் சற்று வித்தயாசமானது. சட்டசபை தொகுதியில் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இதனால், இங்கு, அரசியல் கட்சி செல்வாக்கைவிட, தனிநபர் செல்வாக்கே தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது. இதன் காரணமாகவே அரசியல்வாதிகள், கட்சி மாறுவது சர்வசாதாரணமாக உள்ளது.
இவ்வாறு வெற்றி இலக்கை நோக்கி தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறுவது வழக்கமான பார்முலாவாக இருந்தாலும், பல நேரங்களில் அதுவே அவர்களின் அரசியல் பயணத்தில் பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தி விடுகிறது.
பொதுப்பணித்துறையில் பொறியாளராக பணியாற்றிய தீப்பாய்ந்தான் அரசியல் ஆர்வத்தில், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்., கட்சியில் இணைந்து 2016ம் ஊசுடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2021ம் ஆண்டு பல்வேறு உத்தரவாதங்களுடன் அப்போதைய அமைச்சர் நமச்சிவாயத்துடன், காங்., கட்சியில் இருந்து விலகி பா.ஜ., வில் சங்கமித்தார்.
ஆனால், ஏற்கனவே கூறியபடி கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வில் சீட் தராமல், சாய்சரவணன் குமாருக்கு வழங்கப்பட்டது. வரும் தேர்தலிலும் சாய்சரவணன் குமார் மீண்டும் போட்டியிடுவார் என்பதால், பா.ஜ.,வில் வாய்ப்பில்லை என உறுதியாகிவிட்டது.
அதனால், மாற்று கட்சியாக காங்., கட்சிக்கு செல்லலாம் என்றால், அங்கு அக்கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திகேயன் வரும் தேர்தலில் களம் காண்பது உறுதி என்பதால் அங்கும், அவருக்கு கதவு மூடப்பட்டுவிட்டது.
இதேநிலைதான் பா.ம.க.,வில் எம்.எல். ஏ.,வாகி அரசியல் பயணத்தை துவங்கிய அருள்முருகன், பின்னர் காங்., கட்சியில் இணைந்தார். ஆனால், கடந்த தேர்தலில் மண்ணாடிப்பட்டு தொகுதி காங்., கூட்டணியில் தி.மு.க.,விற்கு ஒதுக்கப்பட்டது. அதனால், அவர் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
பின்னர், நமச்சிவாயம் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார். ஆனால், வரும் தேர்தலில், மண்ணாடிப்பட்டு தொகுதியில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுவது உறுதியாகிவிட்டதால், இம்முறையும் அருள்முருகனுக்கு பா.ஜ.,வில் வாய்ப்பில்லை என்றாகிவிட்டது.
இதனால், இருவரும் வரும் தேர்தலில் என்ன செய்வது என புரியால் திரிசங்கு நிலையில் உள்ளனர்.
இதே நிலையில் மேலும் பல மாஜி எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதால், வரும் தேர்தலில் பல அதிரடி திருப்பங்கள் நிகழ்வது உறுதி.