ADDED : ஜூன் 15, 2025 11:48 PM

புதுச்சேரி : உப்பளம், நேத்தாஜி நகர், பெரியப்பாளையத்தம்மன் கோவில் கட்டுமானப் பணிக்கு, இரண்டாவது கட்டமாக, 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான நிதியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வழங்கினார்.
உப்பளம் தொகுதி, நேத்தாஜி நகர், பெரியப்பாளையத்தம்மன் கோவில் கட்டுமான வேலைகள் நடந்து வருகிறது. இந்து அறநிலைய துறை சார்பில், கட்டுமானப் பணிக்கான முதல் தவணையாக ஏற்கனவே 10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
தற்போது, இரண்டாவது தவணையாக 9 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையை, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., முதல்வர் ரங்கசாமியிடமிருந்து பெற்று கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
தொடர்ந்து, கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அவரிடம் கோவில் நிர்வாகிகள் மீதமுள்ள நிதியை விரைந்து பெற்று தாறுமாறு கோரிக்கை விடுத்தனர்.
அடுத்தக்கட்ட நிதிக்கான காசோலையை முதல்வர் மூலம் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். கிளை செயலாளர் காத்தலிங்கம், கருணாநிதி, கணபதி, கணேசன், அசோகன், கதிர், மனோஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.