Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வீடு கட்டும் திட்டத்திற்கான நிதியுதவி ரூ.5 லட்சமாக உயர்வு! தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்

வீடு கட்டும் திட்டத்திற்கான நிதியுதவி ரூ.5 லட்சமாக உயர்வு! தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்

வீடு கட்டும் திட்டத்திற்கான நிதியுதவி ரூ.5 லட்சமாக உயர்வு! தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்

வீடு கட்டும் திட்டத்திற்கான நிதியுதவி ரூ.5 லட்சமாக உயர்வு! தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்

ADDED : மே 30, 2025 04:36 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: மத்திய அரசுடன், புதுச்சேரி அரசு இணைந்து செயல்படுத்தும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கான நிதியுதவி தொகையை ரூ. 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 22,500 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு கடந்த 2003ம் ஆண்டு முதல் பெருந்தலைவர் காமராஜர் நுாற்றாண்டு வீடு கட்டும் திட்டத்தை மாநில அரசின் நிதியின் மூலம் செயல்படுத்தி வருகிறது. இதுவரை இந்த திட்டத்தின் மூலம் 38,700 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு 2015ம் ஆண்டு பிரதம மந்திரி நகர்புறம் வீடு கட்டும் திட்டம் அறிமுகப்படுத்தியபோது, புதுச்சேரி அரசின் பெருந்தலைவர் காமராசர் நுாற்றாண்டு வீடு கட்டும் திட்டத்தோடு ஒருங்கிணைத்து, புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதிலும் செயல்படுத்தப்பட்டது.

இந்த ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் 15,995 வீடுகள் ஒப்புதல் பெறப்பட்டது. மார்ச் 2025 வரை, 10,928 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 3,241 வீடுகள் பல்வேறு கட்டுமான நிலையில் உள்ளன. இந்த பிரதமர் வீடு கட்டும் - 1.0 திட்டத்தின் கீழ் வீடு கட்ட மத்திய அரசு பங்கீடாக 1.50 லட்சம், மாநில அரசு தனது பங்கீடாக 2 லட்சம் என மொத்தம் 3.50 லட்சம் வழங்கப்பட்டது.

பிரதம மந்திரி நகர்புறம் வீடு கட்டும் திட்டம்-1.0, கடந்தாண்டு மார்ச் மாதம் முடிவுக்கு வந்த நிலையில், மத்திய அரசு, பிரதம மந்திரி நகர்புற வீடு கட்டும் திட்டம்- 2.0 என்கிற புதிய திட்டத்தை செப்டம்பர் 2024ல் அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய திட்டத்தை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் செயல்படுத்தும் பொருட்டு, புதுச்சேரி அரசின் வீடு கட்டும் திட்டமான பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு வீடு கட்டும் திட்டத்துடன் மத்திய அரசால் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிரதம மந்திரி நகர்புற வீடு கட்டும் திட்டம்- 2.0 ஒன்றிணைத்து, ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்டமாக செயல்படுத்த புதுச்சேரி அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 22,500 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினை சேர்ந்த, வீடற்றவர்களுக்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான வீடு கட்டிக்கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கம். இந்த ஒருங்கிணைந்த திட்டத்தில், பொது மற்றும் பிற பின்தங்கிய பிரிவினர்களுக்கு ரூ. 5.00 லட்சம் உயர்த்தி அளிப்பதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மத்திய அரசின் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் 2.0 மூலம் அளிக்கப்படும் நிதியுதவி ரூ. 2.25 லட்சத்துடன் மாநில அரசின் பங்களிப்பாக ரூ. 2.75 லட்சமும் சேர்த்து பயனாளிகளுக்கு மொத்தமாக ரூ. 5.00 லட்சமாக வழங்கப்படவுள்ளது.

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் பலனை பெற பயனாளிகள் அடித்தளம் வரை வீடு கட்டி முடிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதால், மாநில அரசின் பங்களிப்பான ரூ. 2.75 லட்சத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் பணிகளை துவங்கியவுடன் முதல் தவணையாக ரூ. 1.00 லட்சம் அளிக்கப்பட உள்ளது.

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் 1.0 கீழ் விண்ணப்பங்கள் அளித்து, வீட்டு மானியம் வழங்கப்படாதவர்களுக்கும் அடித்தளம் வரை வீடு கட்டி உள்ளவர்களுக்கும் திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்படும்.

எனவே, சொந்தமாக நிலம் வைத்திருக்கும் தகுதியுள்ள வீடற்ற பயனாளிகள், தங்கள் கனவு இல்லத்தை சொந்தமாக்க, இந்த ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள், விண்ணப்ப படிவங்களை புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், விண்ணப்ப படிவங்களை புதுவை நகர மற்றும் கிராம அமைப்பு துறை இணையதளமான www.tcpd.py.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மத்திய அரசின் இணையதளமான https://pmaymis.gov.in/PMAYMIS2_2024/Auth/Login.aspx மூலமும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.

படிவம் அறிமுகம்

உயர்த்தப்பட்ட வீடு கட்டும் நிதியுதவிக்கான விண்ணப்பப் படிவங்களை முதல்வர் ரங்கசாமி நேற்று சட்டசபையில் அறிமுகப்படுத்தினார். சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், பாஸ்கர் தட்சணாமூர்த்தி, ராமலிங்கம் ஆகியோர் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொண்டனர். அரசுச் செயலர் கேசவன், கலெக்டர் குலோத்துங்கன், நகர மற்றும் கிராம அமைப்புத்துறை தலைமை செயல் அதிகாரி ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us