/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பட்டாபிராமர் கோவிலில் தேர் திருவிழா பட்டாபிராமர் கோவிலில் தேர் திருவிழா
பட்டாபிராமர் கோவிலில் தேர் திருவிழா
பட்டாபிராமர் கோவிலில் தேர் திருவிழா
பட்டாபிராமர் கோவிலில் தேர் திருவிழா
ADDED : மே 13, 2025 12:34 AM

பாகூர் : மதிக்கிருஷ்ணாபுரம் பட்டாபிராமர் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா நேற்று நடந்தது.
புதுச்சேரி - கடலுார் சாலை மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர், லட்சுமணன், சீதாபிராட்டி சமேத பட்டாபிராமர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 25 ஆண்டுகளுக்கு பின்னர், சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா நேற்று நடந்தது. கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவை தொடர்ந்து, தினமும் அன்னம், சிம்மம், அனுமன் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வந்தது.
பிரம்மோற்சவத்தின், 7ம் நாளன்று ஸ்ரீ தேவி, பூமி தேவி சமேத சாரங்கபாணி பெருமாள் சுவாமி திருக்கல்யாண வைபவமும், 8வது நாளன்று பாரிவேட்டையும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை 8.30 மணிக்கு நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ.,பங்கேற்று வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.
இதில், மதிக்கிருஷ்ணாபுரம் மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து சாமி தரிசனம் செய்தனர். இன்று (13ம் தேதி) மாலை 6 மணிக்கு தெப்பல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சின்னசாமி மற்றும் விழாக் குழுவினர், கிராம மக்கள் செய்துள்ளனர்.