Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வணிக நிறுவனங்களை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்; வர்த்தக சபை நிர்வாகிகள்  டி.ஐ.ஜி.,யிடம் மனு

வணிக நிறுவனங்களை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்; வர்த்தக சபை நிர்வாகிகள்  டி.ஐ.ஜி.,யிடம் மனு

வணிக நிறுவனங்களை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்; வர்த்தக சபை நிர்வாகிகள்  டி.ஐ.ஜி.,யிடம் மனு

வணிக நிறுவனங்களை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்; வர்த்தக சபை நிர்வாகிகள்  டி.ஐ.ஜி.,யிடம் மனு

ADDED : செப் 13, 2025 07:27 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என, புதுச்சேரி வர்த்தகசபை வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, வர்த்தகசபை தலைவர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் நேற்று டி.ஐ.ஜி., சத்தியசுந்தரத்தை சந்தித்து அளித்த மனு;

புதுச்சேரியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழில் அமைக்க வேண்டும் என, சில சமூக விரோத சக்திகள் போராட்டம் நடத்துகிறோம் என்று கடைகள், வணிக நிறுவனங்கள் மீதும், அவற்றின் பெயர் பலகைகள் மீதும் தாக்குதல் நடத்தி உடைத்து வருகின்றனர்.

கடந்த வாரம் தாக்குதலில் ஈடுபட்ட அந்த கூட்டம், மீண்டும் அதுபோன்ற தாக்குதலை நடத்தி, லட்சக் கணக்கான ரூபாய் செலவில் அமைத்திருந்த வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை அடித்து உடைத்துள்ளனர்.

தடுக்க முயன்ற ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதல் வணிகர்களிடையே அச்சத்தையும், பதட்டத்தையும் உருவாக்கி, அமைதியான வணிகச் சூழல் கெட்டு போகும் நோக்கத்தில் நடத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பல்வேறு நெருக்கடிகளில் சிக்கி அவதியுறும் வணிகர்கள் தமிழ் மொழிக்கு எதிரானவர்கள் போன்று சித்தரித்து, அதன் தொடர்ச்சியாக இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டது வேதனை அளிக்கிறது.

தமிழ் மொழியின் மீது தீராத பற்றுக் கொண்டு பல நிகழ்வுகளை வணிகர்கள் நடத்தி வருகிறார்கள். தமிழில் பெயர் பலகை அமைக்க வணிகர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இல்லாத இடங்களில் அமைத்திட தயாராகவே உள்ளோம். ஆனால், எவ்விதமான காலக்கெடுவும் அளிக்காமல், திடீரென அத்துமீறி உள்ளே நுழைந்து, ஆங்கிலத்தில் பெயர் பலகைகளை எப்படி அமைக்கலாம் எனக் கேட்டு தாக்குதல் நடத்துவதும், ஊழியர்களை தாக்கி, கலவரத்தில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

இதுபோன்ற தாக்குதல்கள் தொடராத வகையில் உறுதியான நடவடிக்கை எடுத்து வணிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us