/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி வணிக வரித்துறையில் சி.பி.ஐ., விடிய விடிய சோதனைபுதுச்சேரி வணிக வரித்துறையில் சி.பி.ஐ., விடிய விடிய சோதனை
புதுச்சேரி வணிக வரித்துறையில் சி.பி.ஐ., விடிய விடிய சோதனை
புதுச்சேரி வணிக வரித்துறையில் சி.பி.ஐ., விடிய விடிய சோதனை
புதுச்சேரி வணிக வரித்துறையில் சி.பி.ஐ., விடிய விடிய சோதனை
ADDED : ஜன 07, 2024 04:46 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் வரி கணக்கை குறைத்து காட்ட லஞ்சம் வாங்கிய வணிக வரித்துறை அதிகாரிகள் இருவர் உட்பட 4 பேரை சி.பி.ஐ.,யினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி நுாறடிச்சாலை, இந்திரா சிக்னல் அருகே வணிக வரி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் மாநில அரசின் ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கப்படுகிறது.
இங்கு பணிபுரியும் சிலர் லஞ்சம் பெற்றுக் கொண்டு, கம்பெனிகளில் உற்பத்தி செய்யும் பொருட்களின் அளவை குறைத்து, பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ய உதவி செய்து வருவதாக சி.பி.ஐ.க்கு புகார் சென்றது.
அதனைத் தொடர்ந்து, சென்னை சி.பி.ஐ., அதிகாரிகள் புதுச்சேரியை சேர்ந்த வணிகவரி ஆலோசகர் ராதிகாவின் மொபைல் போன் உரையாடல்களை கடந்த ஒரு மாதமாக கண்காணித்து வந்தனர்.
அதில், ஒரு தொழிலதிபர் தனது கம்பெனியில் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு வரி குறைத்து காண்பிக்க ராதிகா உதவியை நாடியுள்ளார். அதற்கு, அவர் அதிகாரிகளுக்கு லஞ்சம் ரூ.2 லட்சம் தர வேண்டும் கூறினார். அதன்பேரில், தொழிலதிபர் ஆன்லைன் மூலம் ரூ. 2 லட்சத்தை ராதிகாவிற்கு அனுப்பினார்.
ராதிகா அந்த பணத்தை வங்கியில் இருந்து எடுத்து நேற்று முன்தினம் வணிக வரித்துறை அதிகாரிகளிடம் கொடுக்க சென்றார். அதன்பேரில் அன்று மாலை 4:45 மணிக்கு புதுச்சேரி வணிகவரித்துறை அலுவலகத்தில் நுழைந்த 9 பேர் கொண்ட சி.பி.ஐ., அதிகாரிகள், அங்கிருந்த ராதிகாவை கையும் களவுமாக பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், திருவண்டார்கோவிலில் தனியார் தொழிற்சாலை நடத்தும் வில்லியனுார், கலைவாணர் நகர் சோலை செல்வராசு என்பரின், வரி கணக்கை குறைத்து காட்ட ரூ. 2 லட்சம் லஞ்சம் வாங்கி அதிகாரிகளுக்கு கொடுத்ததாக தெரிவித்தார்.
அதன்பேரில், ராதிகாவிடம் லஞ்ச பணம் வாங்கிய உதவி வணிக வரி அதிகாரிகள் ரெட்டியார்பாளையம் சுதாகர் நகர், 8வது குறுக்கு தெரு ஆனந்த், காரைக்கால், விழுதியூரை சேர்ந்த முருகானந்தம், லஞ்சம் கொடுத்த தொழிற்சாலை உரிமையாளர் சோலை செல்வராசு, புரோக்கராக செயல்பட்ட வரி ஆலோசகர் வெங்கட்டா நகர் 4வது குறுக்கு தெரு ராதிகா ஆகியோரை நேற்று மாலை 4:30 மணிக்கு கைது செய்தனர். பின்னர் 4 பேரையம் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
சி.பி.ஐ.,யினர் ரெய்டு நடத்திய வணிக வரித்துறை முதல்வர் ரங்கசாமியின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள துறை என்பது குறிப்பிடத்தக்கது.
காரைக்கால் வீட்டில் சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கியது
லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட உதவி வணிகவரித்துறை அதிகாரி முருகானந்த்திற்கு, காரைக்கால் மாவட்டம் விழிதியூரில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை 10:00 மணிக்கு 4 பேர் கொண்ட சி.பி.ஐ., குழுவினர் சோதனை நடத்தினர். 5 மணி நேரம் சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ., அதிகாரிகள் எடுத்து சென்றனர்.