Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கைதிகளுக்கு மொபைல் போன் சப்ளை 2 சிறை காவலர்கள் மீது நடவடிக்கை

கைதிகளுக்கு மொபைல் போன் சப்ளை 2 சிறை காவலர்கள் மீது நடவடிக்கை

கைதிகளுக்கு மொபைல் போன் சப்ளை 2 சிறை காவலர்கள் மீது நடவடிக்கை

கைதிகளுக்கு மொபைல் போன் சப்ளை 2 சிறை காவலர்கள் மீது நடவடிக்கை

ADDED : மே 26, 2025 04:38 AM


Google News
புதுச்சேரி : காலாப்பட்டு சிறையில் மொபைல் பயன்பாடு தொடர்பாக கைதிகளுடன் தொடர்பில் இருந்த சிறை காவலர்கள் மீது கவர்னர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் 200க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், மொபைல் போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதிகாரிகள் அவ்வப்பொழுது சிறையில் சோதனை நடத்தி, மொபைல் போன், போதை பொருட்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

இருப்பினும், சிறைச்சாலையில் மொபைல் மற்றும் போதை பொருட்கள் பயன்பாடு குறைந்ததாக தெரியவில்லை. இதற்கு, சிறைச்சாலையில் பணியாற்றும் காவலர்களே, கைதிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, மொபைல் மற்றும் போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுகுறித்து விசாரணை நடத்த கவர்னர் கைலாஷ்நாதன் நேரடியாக களத்தில் இறங்கி, சிறைச்சாலையில் பணியாற்றும் 2 காவலர்களை கொண்டு, ரகசிய விசாரணை மேற்கொண்டார்.

அதில், சிறையில் பணியாற்றும் ஒரு தலைமை காவலரும், மற்றொரு காவலரும் கைதிகளுடன் தொடர்பில் இருந்து மொபைல்கள் மற்றும் போதை பொருட்களை கொடுத்து உடந்தையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கவர்னர் கைலாஷ்நாதன் கடந்த வாரம் சிறைத்துறை அதிகாரிகளை வரவழைத்து, கைதிகளுடன் தொடர்பில் இருந்த தலைமை காவலரை தொடர் விடுமுறையில் செல்ல பரிந்துரை செய்யவும், காவலரை மாகேவிற்கு பணியிடமாற்றம் செய்யவும் உத்தரவிட்டார்.

அதன்படி கவர்னர் உத்தரவின் பேரில், தலைமை காவலரை தொடர் விடுப்பில் செல்ல பரிந்துரை செய்ததுடன், கைதியுடன் தொடர்பில் இருந்த காவலரை மாகேவிற்கு பணியிட மாற்றம் செய்து சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us