Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கடலில் குளித்த 4 மாணவர்கள் மாயம்: புதுச்சேரியில் சோகம்

கடலில் குளித்த 4 மாணவர்கள் மாயம்: புதுச்சேரியில் சோகம்

கடலில் குளித்த 4 மாணவர்கள் மாயம்: புதுச்சேரியில் சோகம்

கடலில் குளித்த 4 மாணவர்கள் மாயம்: புதுச்சேரியில் சோகம்

ADDED : ஜன 01, 2024 05:59 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட வந்த பள்ளி மாணவ, மாணவிகள் 4 பேர் கடலில் மூழ்கி மாயமாகினர். தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

புதுச்சேரி கடற்கரை ஆபத்தான கடல் பகுதி. கடலில் குளிக்க போலீசார் தடை விதித்து இருந்தனர். அதை மீறி சுற்றுலா பயணிகள் பலர் கடலில் குளிக்கின்றனர். புதுச்சேரி, நெல்லித்தோப்பு டி.ஆர். நகர், 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி மீனாட்சி. இவர்களின் மகள்கள் மோகனா, 16; லேகா, 14; இருவரும் சுப்ரமணிய பாரதியார் பள்ளியில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

மீனாட்சி தனது இரு மகள்களுடன் புத்தாண்டு கொண்டாட நேற்று மதியம் புதுச்சேரி கடற்கரை வந்தார். மீனாட்சியின் குடும்ப நண்பர்களான சாரம் பாலாஜி நகரை சேர்ந்தவர் கிேஷார், 17; டிப்ளமோ கேட்ரிங் மாணவர். எல்லப்பிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவில் அருகே வசிக்கும் பிளஸ் 2 மாணவர் நவீன், 17; ஆகியோரும் கடற்கரைக்கு வந்திருந்தனர்.

மீனாட்சி மாணவிகளின் உடைமைகளை பார்த்து கொண்டு அமர்ந்திருந்தார். மோகனா, லேகா, நவீன், கிேஷார் ஆகியோர், பகல் 12:45 மணிக்கு, சீகல்ஸ் ஓட்டல் பின்புறம் உள்ள கடற்கரையில் குளித்தனர். கடலில் ராட்சத அலைகள் எழுந்தது.நால்வரும் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். அருகில் குளித்து கொண்டிருந்த சிலர் கூச்சலிடவே அப்பகுதி மீனவர்கள் கடலில் குதித்து தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.

ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையிலான போலீசார் மேலும் சில மீனவர்களை அழைத்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கிழக்கு எஸ்.பி., சுவாதி சிங் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீனாட்சியிடம் விசாரித்தார்.கடலோர பாதுகாப்பு போலீஸ் மூலம் தேடும் பணி நடந்தது. முத்தியால்பேட்டை, தேங்காய்த்திட்டு, சோலைநகர் உள்ளிட்ட கடற்கரையோர பகுதியில் மீனவர்கள் மூலமும் தேடும் பணி நடந்தது. நேற்று இரவு 9:00 மணியை தாண்டியும் மாணவ மாணவிகள் மீட்கப்படவில்லை.இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பை மீறி குளியல்


புத்தாண்டு கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்காத வகையில் கடற்கரையோரம் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மாணவ மாணவிகள் தடுப்பு கட்டைகளை தாண்டி சென்று கடலில் குளித்து சிக்கியுள்ளனர். தடுப்புகளை மீறி மாணவ மாணவிகள் கடலில் இறங்கி மாயமானது போலீஸ் உயர் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்தது. இதனால் கடற்கரையோரம் நின்றிருந்த சுற்றுலா பயணிகளை போலீசார் விரட்டினர்.

காரைக்கால் போல


காரைக்காலில் கடந்த 2010ம் ஆண்டுகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடலில் குளித்து உயிரை இழந்தனர். அப்போதைய சீனியர் எஸ்.பி.யாக இருந்த ஸ்ரீகாந்த், கடலில் குளித்து உயிரை இழந்தவர்களின் புகைப்படங்களை வரிசையாக அடுக்கி மெகா சைஸ் பேனர்களை கடற்கரையோரம் பல இடங்களில் அமைத்தார்.

கடலில் இறங்கி குளிக்க செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த புகைப்படங்களை பார்த்த பின்பு கடலில் இறங்க தயக்கம் காட்டினர். அதன்பின்பு காரைக்கால் கடலில் உயிர் இழப்பு சம்பவம் குறைந்தது.இதுபோல் விழிப்புணர்வு பேனர் அமைத்தால், கடலில் இறங்கி குளிப்போர் சற்று அச்சம் கொள்வர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us