/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இளங்கலை பட்ட படிப்புகளுக்கான இறுதியாண்டு ரிசல்ட் எப்போது பரிதவிப்பில் புதுச்சேரி மாணவர்கள் இளங்கலை பட்ட படிப்புகளுக்கான இறுதியாண்டு ரிசல்ட் எப்போது பரிதவிப்பில் புதுச்சேரி மாணவர்கள்
இளங்கலை பட்ட படிப்புகளுக்கான இறுதியாண்டு ரிசல்ட் எப்போது பரிதவிப்பில் புதுச்சேரி மாணவர்கள்
இளங்கலை பட்ட படிப்புகளுக்கான இறுதியாண்டு ரிசல்ட் எப்போது பரிதவிப்பில் புதுச்சேரி மாணவர்கள்
இளங்கலை பட்ட படிப்புகளுக்கான இறுதியாண்டு ரிசல்ட் எப்போது பரிதவிப்பில் புதுச்சேரி மாணவர்கள்
ADDED : ஜூலை 08, 2024 04:24 AM
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தாமதமான தேர்வு நடைமுறையால், இளங்கலை பட்ட படிப்பு இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என, பரிதவிப்பில் உள்ளனர்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் பாரதிதாசன் பெண்கள் கல்லுாரி, தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரி, காமராஜர் கலை அறிவியல் கல்லுாரி, காரைக்கால் அண்ணா கலை அறிவியல் கல்லுாரி உட்பட 7 அரசு கல்லுாரிகளும், 5 சொசைட்டி கல்லுாரிகள், 10 தனியார் கல்லுாரிகள் இயங்கி வருகிறது. இதில், பி.ஏ.,- பி.எஸ்.சி.,- பி.காம்., உள்ளிட்ட படிப்புகளில் 15 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இக்கல்லுாரிகளில் படிக்கும் இளங்கலை 3ம் ஆண்டு மாணவர்களுக்கு, வழக்கமாக, மே மாதம் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தி, ஜூன் மாதம் தேர்வு முடிவு வெளியாகும். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக காலதாமதமாக இறுதியாண்டு தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தாண்டு தேர்வு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணி ஓரிரு நாட்களுக்கு முன்பு துவங்கி உள்ளது. இதனால், இறுதியாண்டு செமஸ்டர் ரிசல்ட் வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கால தாமதமான தேர்வு நடைமுறையால் மாணவர்கள் முதுகலை படிப்பிற்கு சேர முடியுமா என்ற குழப்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி பல்கலைக்கழகம் உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களில், கியூட் நுழைவு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முதுகலை படிப்பில் சேர்க்கை நடக்கிறது. அதில் சேரும் புதுச்சேரி மாணவர் இறுதி செமஸ்டர் தேர்வில் தோல்வியுற்றால் அந்த இடம் காலியாகி விடும்.
காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், காரைக்கால் கலைஞர் பட்ட மேற்படிப்பு மையங்களில் சேர்க்கைக்கு விண்ணப்பம் வழங்கப்படுகிறது. 5 வது செமஸ்டர் தேர்வு அடிப்படையில் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளனர்.
பல மாணவர்கள் 1 மற்றும் 2வது ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் தோல்வியுற்றுள்ளனர். அந்த தேர்வுகளை இறுதி செமஸ்டர் தேர்வுடன் எழுதி உள்ளனர். இத்தகைய மாணவர்கள், பட்டமேற்படிப்பு மையங்களில் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மையங்களில் மாணவர் சேர்க்கை முடியும் தருவாயில் உள்ளது.
ஆனால், புதுச்சேரியில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு வெளியாகாததால், வெளிமாநில பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மையங்களில் புதுச்சேரி மாணவர்கள் விரும்பிய பாடத்தை படிக்க முடியாத நிலை ஏற்பட்டு, பரிவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.
பெற்றோர்கள் கூறுகையில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நிர்வாக சீர்கேட்டால் ஒவ்வொரு ஆண்டும் இறுதியாண்டு மாணவர் தேர்வு முடிவு காலதாமதமாக வெளியாகிறது.
இதனால் புதுச்சேரி மாணவர்கள் வெளிமாநிலத்திற்கு சென்று விரும்பிய பாடங்களை படிக்க முடியாத நிலைய உருவாக்குகின்றனர். தனியார் பட்ட மேற்படிப்பு மையங்களிலும் சேர்க்கை முடிந்து விட்டது. இந்த விஷயத்தில் கவர்னர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்தனர்.