Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'ரங்கசாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன' 'மாஜி' முதல்வர் கடும் விமர்சனம்

'ரங்கசாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன' 'மாஜி' முதல்வர் கடும் விமர்சனம்

'ரங்கசாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன' 'மாஜி' முதல்வர் கடும் விமர்சனம்

'ரங்கசாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன' 'மாஜி' முதல்வர் கடும் விமர்சனம்

ADDED : ஜூலை 07, 2024 03:50 AM


Google News
புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாக, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

கடந்த இரண்டரை ஆண்டு காலமாக, காங்., சார்பில், என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி மீது, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தேன்.

தற்போது பா.ஜ., மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள், அதே குற்றச்சாட்டுக்களை பா.ஜ., தலைமையிடம் புகாராக தெரிவித்து, நான் கூறிய குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தி உள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் இதுவரை எந்த பதிலும் கூறவில்லை. என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி தற்போது ஆட்டம் கண்டு விட்டது. இந்த ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன.

ஊழலை முதல்வரும், அமைச்சர்களும் மூடி மறைக்கப்பார்க்கின்றனர். இந்த ஆட்சியில் ஊழலை தவிர வேறொன்றும் நடைபெறவில்லை. அமைச்சர் நமச்சிவாயம், லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த பின்னரும், அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார்.

நமச்சிவாயத்தின் மனைவி, எந்த தொழிலும் செய்யவில்லை. அவர் கன்னியக்கோவில் பகுதியில், பெட்ரோல் பங்க் அமைக்க, பல லட்சம் மதிப்பில் இடம் வாங்கினார்.

அந்த பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு வரும் இடத்திற்கு பின்புறத்தில், 4 ஆயிரத்து 200 ச.அடி., இடம், அங்கு வசிப்பவர்கள் செல்வதற்காக, சீனிவாசா குழுமத்தின் மூலமாக, அவர்கள் மனைகள் பிரிக்கும் போது, கொடுக்கப்பட்டது. பெட்ரோல் பங்க் அமைப்பதற்காக, அந்த இடத்தை, மதில் சுவரை உடைத்து ஆக்கிரமித்து, அவர்கள் செல்ல வழி இல்லாமல், மணல் கொட்டி, தடுத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, போலீஸ் மற்றும் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் யாரும் இதை கண்டு கொள்ளவில்லை. இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருக்கு, கடிதம் எழுதப்போகிறேன்.

அதேபோல, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வீடு, ரூ.2 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு அவருக்கு யார் அனுமதி கொடுத்தது என தெரியவில்லை. இதற்கு பெயர் ஊழல் இல்லையா.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us