ADDED : ஜூன் 16, 2024 05:52 AM
பாகூர்: பள்ளிக்கு சென்ற சிறுமி, பைக் மோதி படுகாயமடைந்தார்.
அரியாங்குப்பம் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் சிவசக்தி,45; பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் சிவலட்சுமி,13; அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை தனது பாட்டியுடன் பள்ளிக்கு சாலையோரம் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, வாலிபர் ஒருவர் அதிவேகமாக ஓட்டி வந்த பைக், மாணவி சிவலட்சுமி மீது மோதியது. அதில், சாலையில் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சிவலட்சுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.