ADDED : மே 11, 2026 05:41 PM
பாகூர்: புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் சார்பில் ‘அன்பும் அறனும்’ என்னும் தலைப்பில் கோடைக்கால வாழ்வியல் கருத்தரங்கம் நடந்தது.
பாகூரை அடுத்துள்ள சோரியங்குப்பம் முத்தமிழ்க் கூடல் இல்லத்தில் நடந்த ‘அன்பும் அறனும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கிற்கு, மண்டல அமைப்பாளர் பவித்ரா வரவேற்றார். நலப்பணிச் சங்க தலைவர் நல்லாசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கி, இவ்வுலகில் அன்புடனும் அறத்துடனும் வாழ்வதன் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார். ஆலோசகர் வரலாற்று விரிவுரையாளர் முத்துஐயாசாமி, துணைத் தலைவர் காவலர் கணபதி, மண்டல அமைப்பாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவிகள் கிருத்திகா, சரினா, செல்வி, பத்மஸ்ரீ ஆகியோர் அன்பின் வழியது உயிர்நிலை என்பது குறித்து விளக்கமளித்தனர். மாணவிகள் தமிழ்மொழி, ஞானஸ்ரீ, திவாஷினி, நிஷா, வரலட்சுமி ஆகியோர் அறத்தின் வழியில் வாழ்வு குறித்து கருத்துரையாற்றினார். கருத்தரங்கில், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் எழுதுபொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. மண்டல அமைப்பாளர் மென்பொருள் பொறியாளர் சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.
