ADDED : ஜூலை 10, 2024 04:34 AM
புதுச்சேரி, : எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு தேர்வில் அரியர் வைத்ததால், மனமுடைந்த கல்லுாரி மாணவர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி மேரி உழவர் கரை நாராயணசாமி தெருவை சேர்ந்தவர் குமரகுரு. டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் முகேஷ், 20; காலாப்பட்டு தனியார் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு படித்தார்.
அவர், முதலாமாண்டு தேர்வில் ஒரு பேப்பரில் அரியர் வைத்துள்ளதாக தெரிகிறது. இதனால், மனமுடைந்த முகேஷ், கடந்த சில தினங்களாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டிலிருந்த 20,000 பணம் மற்றும் ஆதார் கார்டை எடுத்துக் கொண்டு முகேஷ் மாயமானார்.
அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று இருந்துள்ளது. அதில், 'எனக்கு இந்த வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. எனவே நான் வீட்டை விட்டு செல்கிறேன்' என எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து குமரகுரு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள் தேடியும் முகேஷ் கிடைக்கவில்லை. இதுகுறித்து குமரகுரு அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து முகேஷை தேடி வருகின்றனர்.