ADDED : ஜூன் 29, 2024 06:19 AM
புதுச்சேரி : புதுச்சேரி, காரைக்காலில் உள்ள சாராயக் கடைகள் இன்று ஏலம் விடப்படுகிறது.
புதுச்சேரி கலால் துறை மூலம் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. அதில், 100 கோடி ரூபாய் சாராய கடைகள் மூலம் கிடைக்கிறது. புதுச்சேரி, காரைக்காலில், சாராயக்கடைகள், கள்ளுக்கடைகள் அதிகளவு இருந்தது. ஆனால் சாரயத்தின் விலைக்கே மதுபானங்கள் கிடைப்பதால், சாராயக் கடைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
புதுச்சேரியில் சாராயக் கடைகள் 85, காரைக்காலில் 25, புதுச்சேரியில் கள்ளுக்கடைகள் 66, காரைக்காலில் 26 உள்ளன. இந்த கடைகள் ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் விடப்படுகிறது.
நடப்பாண்டு வரும் 1ம் தேதி முதல் புதிய ஏலத்தில் கடைகள் எடுக்கப்பட்டு இயங்க வேண்டும். கலால் துறை அனுப்பிய கோப்புக்கு கவர்னர் ராதாகிருஷ்ணன் அனுமதி அளித்துள்ளார். அதையடுத்து, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள சாராயக்கடைகள் இன்று ஆன்லைனில் ஏலம் விடப்படுகிறது.
அதில், சாராயக்கடைகளுக்கு மதியம் 12:00 மணி முதல் 1:00 மணி வரையிலும், கள்ளுக்கடைகளுக்கு மதியம் 3:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை ஏலம் நடக்கிறது. ஏலம் நடக்க உள்ள சாராயக்கடைகளின் விபரங்கள் www.py.gov.in என்ற இணையதள முகவரிலும், கலால்துறை அலுவலத்தில் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.