ADDED : ஜூலை 14, 2024 10:56 PM
புதுச்சேரி: தனியார் நிறுவன அதிகாரியின் வீட்டின் பூட்டை உடைத்து தங்க மற்றும் வெள்ளி நகைகளை திருடி நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் கோவர்தன் சாய், 35; தனியார் நிறுவனத்தில் அதிகாரி. தனது குடும்பத்துடன் அரும்பார்த்தபுரம் அருகே வசித்து வருகிறார். இவரது உறவினர் நிகழ்ச்சிக்கு, ஹைதராபாத்திற்கு குடும்பத்துடன் கடந்த மாதம் 20ம் தேதி சென்று விட்டு, நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ஒரு சவரன் நகை மற்றும் வெள்ளி நகைகள் திருடு போயிருந்தது.
அவர் கொடுத்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.