ADDED : ஜூன் 06, 2024 02:30 AM
வில்லியனுார்: வில்லியனுாரில் தனியார் விடுதி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வில்லியனுார் பைபாஸ் அருகே கூடப்பாக்கம் சாலையில் ஸ்ரீ சாய் இன்ஸ்டிட்யூட் உள்ளது. இங்கு கோயம்புத்துரை சேர்ந்த தாய், தந்தையை இழந்த 17 வயது மாணவி பி.எஸ்.சி., எம்.எல்.டி படித்து வருகிறார். இன்ஸ்டிட்யூட் விடுதியில் தங்கி உள்ளார். இந்நிலையில் வில்லியனுார் அடுத்த பெருங்களூர் கிராமத்தைச் சேர்ந்த முகேஷ், விடுதி பெண் காப்பாளரை அடிக்கடி வந்து சந்தித்து பேசுவார். அப்போது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது, அதனை தொடர்ந்து இருவரும் மொபைல் போனில் பேசி வந்தனர்.
இது விடுதி காப்பாளருக்கு தெரியவந்ததும், முகேஷ்சை கண்டித்துள்ளார். அப்போது தான் விடுதி காப்பாளரை முகேஷ் காதலித்து வந்ததும் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதும் மாணவிக்கு தெரிந்தது.
இது குறித்து மாணவி, முகேஷ்சிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மாணவியிடம், உன்னை காதலிக்கவில்லை என்றும், திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவி, கடந்த 4ம் தேதி பகல் 12 மணியளவில் விடுதியில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உடனிருந்த சகமாணவியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இது குறித்து வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.