/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோவில் விழாவில் தீ விபத்து குழந்தை, இளம் பெண் காயம் கோவில் விழாவில் தீ விபத்து குழந்தை, இளம் பெண் காயம்
கோவில் விழாவில் தீ விபத்து குழந்தை, இளம் பெண் காயம்
கோவில் விழாவில் தீ விபத்து குழந்தை, இளம் பெண் காயம்
கோவில் விழாவில் தீ விபத்து குழந்தை, இளம் பெண் காயம்
ADDED : ஜூன் 06, 2024 02:31 AM
திருக்கனுார்: செட்டிப்பட்டில் நடந்த கோவில் திருவிழா இசை கச்சேரியின் போது, ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை மற்றும் இளம்பெண் காயம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி உற்சவம் கடந்த 31ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி, 5ம் நாள் விழாவாக, நேற்றிரவு புதுச்சேரியைச் சேர்ந்த சாய் சங்கீத் இசைக்குழுவினரின் இசை கச்சேரி நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியின் நிறைவாக இரவு 9:50 மணிக்கு கருப்பசாமி மற்றும் காளி வேடமணிந்த இசைக்குழுவினர் தீப்பந்தத்துடன் பொது மக்கள் மத்தியில் திடீரென புகுந்து நடனமாடினார். அப்பொழுது எதிர்பாராத விதமாக தீப்பந்தம் மற்றும் கையில் வைத்திருந்த பெட்ரோல் பாட்டில் கீழே விழுந்து சிதறியது. இதில், அருகில் அமர்ந்திருந்த ஒரு குழந்தை மற்றும் இளம்பெண் ஆகியோருக்கு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து, தீ காயமடைந்த இருவரை மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவமனை அழைத்து சென்றனர்.
பின்னர், தகவலறிந்த திருக்கனுார் போலீசார் இசை கச்சேரியை தடுத்து நிறுத்தியதுடன், இசை குழுவினரின் ஒருங்கிணைப்பாளரை ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் திருவிழாவில் நடந்த இசைகச்சேரியின் போது, நடந்த நடன நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக குழந்தை மற்றும் இளம் பெண் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.