/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பரோலில் வந்த சிறை கைதி குடும்பத்துடன் 'எஸ்கேப்'; விசாரணையை திசை திருப்பி பதுங்கல் பரோலில் வந்த சிறை கைதி குடும்பத்துடன் 'எஸ்கேப்'; விசாரணையை திசை திருப்பி பதுங்கல்
பரோலில் வந்த சிறை கைதி குடும்பத்துடன் 'எஸ்கேப்'; விசாரணையை திசை திருப்பி பதுங்கல்
பரோலில் வந்த சிறை கைதி குடும்பத்துடன் 'எஸ்கேப்'; விசாரணையை திசை திருப்பி பதுங்கல்
பரோலில் வந்த சிறை கைதி குடும்பத்துடன் 'எஸ்கேப்'; விசாரணையை திசை திருப்பி பதுங்கல்
ADDED : ஜூன் 17, 2024 06:44 AM

புதுச்சேரி : பரோலில் வந்து குடும்பத்துடன் தலைமறைவாக உள்ள ரவுடி கருணாவை கண்டுபிடிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, முதலியார்பேட்டை அனிதா நகரைச் சேர்ந்தவர் ரவுடி கருணா (எ) மனோகரன். கடந்த 1997 உருளையன்பேட்டையில் நடந்த கொலை வழக்கில், கடந்த 1998 ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 14 ஆண்டிற்கு மேல் சிறையில் உள்ள தன்னை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய கோரிக்கை விடுத்திருந்தார். புதுச்சேரி உள்துறை நிராகரித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கருணா மேல்முறையீடு செய்துள்ளார்.
20 ஆண்டிற்கு மேல் சிறையில் உள்ள கருணா, குடும்ப நிகழ்ச்சி, உறவினரை சந்திக்க இதுவரை 33 முறை பரோலில் வெளியே வந்து சென்றுள்ளார். தனது மனைவி உடல்நிலை சரியில்லை என கூறி கடந்த 11ம் தேதி 3 நாள் பரோலில் வெளியே வந்த கருணா 13ம் தேதி சிறையில் ஆஜராக வேண்டும்.
ஆனால், அன்று சிறைக்கு செல்லவில்லை. அதிர்ச்சி அடைந்த சிறைத்துறையினர் கருணாவின் வீட்டிற்கு வந்தபோது, அவரது வீடும் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிந்து விசாரித்தபோது, கருணா, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு கருணாவின் சொத்துக்களும் பல விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கருணா மற்றும் அவரது குடும்பத்தினர் மொபைல்போன் சிக்னல்கள் கடைசியாக திருப்பதியில் காட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், கருணாவை கண்டுபிடிக்க சிறப்பு குழு நியமிக்கப்பட்டனர். இக்குழுவின் விசாரணையில், திருப்பதி செல்வதுபோல் போலீசை திசை திருப்பிவிட்டு, கருணா குடும்பத்துடன் வேறு பகுதியில் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. கருணாவின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் சிறப்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். ஓரிரு நாட்களில் கண்டறிவோம் என குழுவினர் தெரிவித்தனர்.
போலீஸ் அலட்சியம்
கருணா பரோலில் வெளியே வர முதலியார்பேட்டை போலீசார் அனுமதி கொடுத்தனர். தினசரி ரோந்து செல்லும் போலீசார் கருணா வீட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கருணா குடும்பத்துடன் தப்பிச் செல்லும் வரை போலீசார் அனிதா நகர் பக்கம் செல்லாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.